இந்தியர்கள் மீது இனவெறி கருத்து தைவான் அமைச்சர் வருத்தம்

இந்திய தொழிலாளர்கள் குறித்து இனவெறி மற்றும் பாகுபாட்டை துாண்டும் வகையில் தெரிவித்த தன் கருத்துக்கு, தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கிழக்காசிய நாடான தைவானில், பல்வேறு துறைகளில் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைப் போக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பணியாற்ற தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சூ மிங்சுன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தைவான் தொழிலாளர் துறை, வடகிழக்கு இந்திய மக்களை பணியில் அமர்த்த முன்னுரிமை வழங்க உள்ளது. ஏனெனில் அவர்களின் தோற்றம், தோல் நிறம், உணவு பழக்கவழக்கங்களும் தைவான் நாட்டு மக்களுடன் பெருமளவு ஒத்து போகிறது.

”மேலும், இப்பகுதியில் உள்ள மக்கள் கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை, விவசாயம் உள்ளிட்டவைகளில் திறன் வாய்ந்தவர்களாக உள்ளனர்,” என்றார். இனவெறி மற்றும் பாகுபாடுகளை உருவாக்கும் வகையில் அந்நாட்டின் அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, பலர் தங்கள் கண்டனங்களையும் பதிவிட்டனர்.

இதையடுத்து, தன் கருத்துக்கு அமைச்சர் மிங்சுன் நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய பணியாளர்களின் திறமையை மேம்படுத்தி தான் பேச முற்பட்டது, தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

”தவறாக புரிந்து கொள்ளப்பட்ட என் கருத்துகளுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் அனைவருக்கும் இடையே, எந்தவித பாகுபாடுகளும் இல்லாத வகையில்தான் தைவானின் தொழிலாளர் நல சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார். முன்னதாக, தைவானின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வெளியுறவுத் துறை, அமைச்சரின் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இந்தியர்களை பணியில் அமர்த்தும் ஒரு நாடு, இந்திய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளை குறிப்பிட்டு முன்னுரிமை வழங்க உள்ளதாக கூறியது இதுவே முதன்முறை.