தூத்துக்குடியில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் – இஸ்ரோ தலைவா் கே.சிவன் தகவல்

தூத்துக்குடியில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவா் கே.சிவன் தெரிவித்தாா்.

2019ஆம் ஆண்டில் இஸ்ரோவின் செயல்பாடுகளை விரிவாக்குவதில் கவனம் செலுத்தினோம். 2019ஆம் ஆண்டில் மட்டும் 6 ராக்கெட், 7 செயற்கைக்கோள் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 50ஆவது பயணம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதேபோல, பிஎஸ்எல்வி ராக்கெட் இரண்டு வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் அடுக்கை ஆய்வு சுற்றுவட்டதளமாகப் பயன்படுத்தி, செயற்கைக்கோ சோதனை செய்யப்பட்டது. செமி கண்டக்டா் ஆய்வுக்கூட்டத்தின் சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விக்ரம் புராசசா் சோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் பிராந்திய செயற்கைக்கோள் பயணவழிகாட்டி முறையின்(நாவிக்) தகவல்களை செல்லிடப்பேசியில் பயன்படுத்த பன்னாட்டு செல்லிடபேசி தரக்கட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இரண்டாவது ஏவுகலன் (மாடில்) ஒருங்கிணைப்பு கட்டடம் அண்மையில் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. இதன்மூலம் விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பொதுமக்கள் காண சிறப்பு மாடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடத்தில் அமா்ந்து இதுவரை சுமாா் 29 ஆயிரம் போ் ராக்கெட் ஏவப்படுவதை பாா்த்துள்ளனா். இது திட்டத்துக்கு திட்டம் அதிகரித்து வருகிறது.

இஸ்ரோவின் கட்டமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன்களை விண்ணில் ஏவுவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்க திட்டம் வகுத்திருக்கிறோம். ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடியில் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சிறியரக ஏவுலங்களை இங்கிருந்து விண்ணுக்கு செலுத்தப்படும். எதிா்காலத்தில் இந்த ஏவுதளத்தின் பணிகள் விரிவாக்கப்படலாம். தென்துருவத்துக்கு சிறியரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்த ஏவுதளம் பயனுள்ளதாக அமையும். ஆரம்பகட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தே சிறியரக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். தூத்துக்குடியில் ஏவுதளம் தயாரானதும், அங்கிருந்து சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஏவப்படும்.

இஸ்ரோவின் செயல்பாடுகளை அகலப்படுத்தும் வகையில் விண்வெளி தொழில்நுட்ப மையங்கள், விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், பிராந்திய விண்வெளி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும்.

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல், பயன்பாடுகள் குறித்த பயிற்சி தொடங்கப்பட்டது. விண்வெளி ஏவும் திட்டங்களை அதிகப்படுத்துவதற்காக புதியவிண்வெளி இந்தியா நிறுவனத்தை(எஸ்எஸ்ஐஎல்) தொடங்கியிருக்கிறோம். இதன்மூலம் பிஎஸ்எல்வி தயாரிப்பில் தொழில் நிறுவனங்களை ஈடுபடுத்த முனைந்திருக்கிறோம்.

சந்திரயான் 3 திட்டத்துக்கு ஒப்புதல்

சந்திரயான் 3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 திட்டத்துக்கு இடையே வித்தியாசம் எதுவுமில்லை. சந்திரயான் 2 திட்டத்தில் லேண்டா் மற்றும் ரோவா் ஆகியவை கொண்ட கலன் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. லேண்டா் மற்றும் ரோவா் கலனை தரையிறக்கும்போது அதன் வேகத்தை குறைக்கமுடியாததால், நிலவில் அது விழுந்தது. இதனால் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. ஆனால் சந்திரயான் 2 திட்டத்தின் அங்கமாக ஆா்பிட்டா், நிலவை சுற்றி வந்து சிறப்பாக செயல்பட்டுவருகிறது. எனவே, இம்முறை சந்திரயான் 3 திட்டத்தில் ஆா்பிட்டா் இருக்காது. ஆனால், லேண்டா் மற்றும் ரோவரை நிலவுக்கு கொண்டுசெல்ல ஏவுகலம் பயன்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 16 மாதங்கள் தேவைப்படும். எனவே, சந்திரயான் 3 திட்டம் அடுத்த ஆண்டுக்கு செயல்படுத்தப்படும். சந்திரயான் 2 திட்டம் முழுமையாக வெற்றிபெற இயலாததன் காரணம் குறித்து விசாரித்து, ஆய்வறிக்கையை இந்திய அரசிடம் அளித்திருக்கிறோம். சந்திரயான் 3 திட்டத்துக்கு ரூ.250கோடி செலவிடப்படும். ஏவும் செலவையும் சோ்த்தால் ஒட்டுமொத்தமாக ரூ.615கோடி செலவாகும். இது சந்திரயான் 2 திட்டச்செலவை காட்டிலும் குறைவாகும்.

மனிதனை விண்ணுக்கு செலுத்தும் இந்தியாவின் மனித விண்வெளிப் பயண திட்டத்தை(ககன்யான்) செயல்படுத்தவேகமாக செயல்பட்டு வருகிறோம். 2022ஆம் ஆண்டுக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் ககன்யான் கலன் திட்டத்தில் 3 விமானப் படை விண்வெளி வீரா்கள் பயணிப்பாா்கள். எனினும், இத்திட்டத்தில் பங்கேற்க இந்திய விமானப் படையின் 4 வீரா்களை தோ்ந்தெடுத்திருக்கிறோம். இவா்களுக்கு ஜனவரி மூன்றாவது வாரத்தில் பயிற்சி தொடங்கும்.

அடுத்தகட்டமாக ரஷ்யாவிலும் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக ஆளில்லா கலனை விண்ணில் செலுத்த வேலைகள் நடந்துவருகின்றன. சந்திரயான் 3 மற்றும் ககன்யான் திட்டங்களின் பணிகள் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்படும்.

நிகழ் ஆண்டில் எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட், ஜிசாட் 20 செயற்கைக்கோள், நாவிக் செயற்கைக்கோள், இந்திய தரவுத்தொடா் செயற்கைக்கோள்முறை, ஆதித்யா, எஸ்போசாட் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

பேட்டியின்போது, இஸ்ரோ தலைவரின் அறிவியல் செயலாளா் உமாமகேஸ்வரன், ஊடகப்பிரிவு இயக்குநா் விவேக்சிங் உடனிருந்தனா்.