“தூக்கத்தை இழந்த இண்டியா கூட்டணியினர்”: பிரதமர் மோடி கடும் தாக்கு

ஹரியானா மாநிலம் குருகிராமில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 114 சாலை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 2024ம் ஆண்டு துவங்கி இன்னும் 3 மாதங்கள் கூட ஆகவில்லை, குறுகிய காலத்தில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இது தவிர, பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி, வளர்ச்சித் திட்டங்களுக்கு துவக்கி வைத்துள்ளனர். துவாரகா விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க, 9,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டில்லி-ஹரியானா இடையே போக்குவரத்தின் அனுபவம் மாறும். முந்தைய அரசுகள் ஒரு சிறிய திட்டத்தை துவங்கி ஐந்தாண்டுகள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டன. மறுபுறம், பா.ஜ., அரசு செயல்படும் விதத்தில், அடிக்கல் நாட்டுவதற்கும், திட்டங்களைத் துவக்குவதற்கும் நேரம் குறைவாக உள்ளது. துவாரகா விரைவுச்சாலை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை மிக வேகமாகவும், பெரிய அளவில் அடையவும் நான் விரும்புகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் பல மடங்கு அதிகரிக்கும். பா.ஜ., அரசு செய்து வரும் வளர்ச்சிப் பணிகளால் காங்கிரசார் மற்றும் இண்டியா கூட்டணியினர் தூக்கத்தை இழந்துவிட்டனர். உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையும் போது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற உதவும். விரைவுச்சாலைகள் கிராமப்புற மக்களுக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.