கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 744 ஆக உயர்வு – ஆண்டுக்கு 20% வளர்ச்சி

தொழில் நகரான கோவை ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் நிலையில், சமீப காலமாக தகவல் தொழில் நுட்பத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. சென்னைக்கு அடுத்து கோவையில் தான் அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர பெங்களூரு போன்ற நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பல முன்னணி பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள் ஏற்கெனவே கோவையில் கிளைகளை அமைத்து செயல்பட தொடங்கியுள்ளன.
அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் அவிநாசி சாலை, சரவணம்பட்டி சுற்றுப்புற பகுதிகள், பொள்ளாச்சி சாலை என பல்வேறு இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு படிப்பு முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப அரசு சார்பிலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப் படுகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் 2024 ஜனவரி நிலவரத்தின்படி ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் சிறந்த வளர்ச்சியை பெறும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் ( சிஐஐ ) கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் கூறியதாவது: ஐ.டி. துறையில் கோவை மாவட்டம் சிறப்பான வளர்ச்சியை பெற இங்குள்ள காலநிலை, உள்கட்டமைப்பு வசதிகள், வாழ்க்கை தரம் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் பல ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஆண்டுதோறும் இத்துறையில் 20 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு வருகிறது. எதிர்வரும் காலங்களில் மேலும் 30 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த அதிக வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு ரூ.1,100 கோடி மதிப்பில் அறிவித்துள்ள ஐ.டி. திட்ட அறிவிப்பு இத்துறை வளர்ச்சிக்கு மிகவும் உதவும். சிஐஐ சார்பில் ‘கோயமுத்தூர் நெக்ஸ்ட்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார நிலையை உயர்த்த தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். எனவே, எதிர்வரும் காலங்களிலும் கோவை ஐ.டி. தொழிலில் சிறந்த வளர்ச்சியை தக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறும் போது, “பொதுவாக ஆண்டுதோறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் பணியை விட்டு வெளியேறுவது வழக்கம். தொழில் நிறுவனங்கள் பயிற்சி அளித்து பல்வேறு செலவுகளை செய்து ஒரு ஊழியரை பணியமர்த்தும் போது திடீரென அவர்கள் வெளியேறுவது பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் கோவையில் உள்ள உள்கட்டமைப்பு, வாழ்க்கைத் தரம், காலநிலை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான ஐ.டி. ஊழியர்கள் கோவையில் பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பணியை விட்டு செல்ல விரும்புவதில்லை.
இத்தகைய சூழலில், கோவை மாவட்டத்தில் ஐ.டி. தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அதிகரிக்க தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது. கோவையில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் உள்ள காரணத்தால், படித்தவுடன் ஐ.டி. தொழில் நிறுவனங்களில் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்வரும் காலங்களில் கோவை மாவட்டம் ஐ.டி. துறையில் மிகச் சிறந்த வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.