கர்நாடகாவில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை

ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கர்நாடகாவிலும் (11.3.24)முதல் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் விற்பனையான பஞ்சு மிட்டாயை, தமிழக அரசு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் புற்றுநோயை உண்டாகும் ‘ரோடமைன் பி’ ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பஞ்சு மிட்டாய்க்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. தற்போது, அங்கு வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் மட்டுமே விற்கப்படுகிறது.

இதுபோன்று, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடகா முழுதும் 170க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் மாதிரிகளை ஆய்வகத்துக்கு எடுத்து சென்றனர். ஆய்வு அறிக்கையை, மாநில சுகாதார துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

அதில், ‘மாநிலம் முழுதும் ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்ட 170க்கும் மேற்பட்ட மாதிரிகளில், 100க்கும் மேற்பட்டவைகளில், பஞ்சு மிட்டாய்களில் தீங்கு விளைவிக்கும் ‘ரோடமைன் பி’ மற்றும் கோபி மஞ்சூரியனில் ‘சன்செட் எல்லோ’ கலர் மற்றும், ‘டாட்ராசின்’ ஆகிய ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கர்நாடகாவிலும் இன்று முதல் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.