திறன் மேம்பாடு:மூன்றெழுத்தில் மூச்சு: ‘திறன்’!

தமிழகத்தில் சுமார் 1800 ‘விவசாய உதவியாளர்’ வேலை காலியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக மே மாதம் நடந்த நேர்காணல்களில் விண்ணப்பித்த இளைஞர்களும் இளம் பெண்களும் மாடு மேய்த்துக்காட்ட வேண்டியிருந்தது; சைக்கிள் ஓட்டிக் காட்ட வேண்டியிருந்தது. மாடு மேய்க்கணுமாமே என்று பல விண்ணப்பதாரர்கள் திரும்பிச் சென்றுவிட்டதாகச் செய்தி. படித்த தலைமுறைக்கு ‘திறன்’ (ஸ்கில்) விஷயத்தில் உள்ள ஈடுபாட்டை ஊரறியச் செய்த செய்தி அது. உழவோ, தொழிலோ இனி இளைய தலைமுறைக்கு இனியதாகணும். என்ன செய்யலாம்? ஒரு பார்வை:

எதனாலோ அப்பாவுக்கு மகன் மேல் அப்படி ஒரு கோபம். வாயால் விளாசலானார்: எதிர்வீட்டுக்காரர் தன் பிள்ளையை டாக்டருக்கு படிக்க வைத்தார். பக்கத்து வீட்டுக்காரர் தன் பிள்ளையை இன்ஜினியர் ஆக்கினார். பின்வீட்டுக்காரர் தன் பிள்ளையை ஐ.டி. நிபுணராக்கினார். அப்படியெல்லாம் செய்து உன்னை உருப்படாமலடிக்க தவறிவிட்டேன். நாலு பசுமாடு வாங்கிக் கொடுத்தேன். நீ ஏகத்துக்கு செழித்துப்போய்விட்டாய். அந்தக் கொழுப்பு…”

இந்த இணையதள துணுக்கு சொல்லும் சேதி தெளிவு. பெரிய படிப்பு படித்து முடித்துவிட்டு கைநுணுக்கம், திறன் (குடுடிடூடூ  ஸ்கில்) என்கிறார்களே அது எதுவும் இல்லாமல் பேந்தப் பேந்த விழிக்கும் இளைஞர்களை சமுதாயத்திற்கு சப்ளை செய்யும் அபத்தம் தான் அது.

பாரத அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் துறை அமைச்சர் பீகாரைச் சேர்ந்த பிரதாப்  ரூடி, டெல்லியில் ஒரு சமையல்காரரை சந்தித்தார். பீகாரைச் சேர்ந்த அந்த சமையல்காரர் தான் செய்யும் தொழிலை தன் ஊருக்குள் சொல்லிக்கொள்வதில்லை என்று ரூடியிடம் தெரிவித்தார். சமையல் தொழிலுக்கு கௌரவம் இல்லையாம். இந்த சம்பவத்தை, ரூடி  சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.

2014 சுதந்திர மோடி தினத்தன்று திறன் மேம்பாடு பற்றி பிரதமர் செங்கோட்டை பேருரையில் பேச்செடுத்தார். போன ஆண்டு, கனடா நாட்டில் பேசும்போது, ஊழல்மிகு நாடு என்ற பெயர்பெற்ற பாரதம் இனி திறன்மிகு நாடு ஆகப்போகிறது. அதற்காக பாடுபடுகிறோம் என்று அவர் முழங்கியிருக்கிறார். எனவே பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு 2022க்குள் 50 கோடி திறன்மிகு நபர்களை கொண்ட ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை உருவாக்கப்போவதாக சபதம் ஏற்றுள்ளது. எனவே இளைஞர்களின் தேசமான பாரதத்தில் இளைஞர்களுக்கு திறன் என்ற பொக்கிஷத்தை திறந்துவிடுவதில் அரசு முனைந்துள்ளது. (பார்க்க பெட்டி செய்திகள்)

அரசு இருக்கட்டும், ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன பேச்சு அடிபடுகிறது? பிள்ளைகளுக்கு மெடிக்கலோ, என்ஜினியரிங்கோ,ஐ.டி யோ எட்டாக்கனிகள் ஆகிவிட்ட நிலையில்தான் மிகப்பெரும்பாலான குடும்பங்கள் காலம் தள்ளுகின்றன. சரி, ஏதாவது ஒரு ஸ்கில் வளர்த்துக்கொண்டு சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடைபோட முடியுமா என்றால் நேற்றுவரை முடிவதில்லை. இனி உழவுக்கு வந்தனை செய்வது போல சமுதாயம் தொழிலுக்கும் வந்தனை செய்ய மனதை தயார் செய்துகொண்டிருக்கிறது என்பதால் திறன் வளர்த்துக்கொள்ள பலரும் இப்போது வெட்கப்படுவதில்லை.

எனவேதான் பாரத அரசு 12,000 ஐ.டி.ஐ. பள்ளிகளை நோக்கி தனது கூர்மையான பார்வையை இதன் பலனாக உருவாகப்போகிற கோடிக்கணக்கான திறன்பெற்ற தொழிலாளர்களால் அரசாங்க தொழிலகங்களுக்கு ஜாக்பாட் அடித்தாலும், வெகுவேகமாக ஓங்கிவரும் தனியார் துறைக்கும் இது சூப்பர் ஜாக்பாட்தான்.

ஒரு பிளம்பரோ, ஒரு எலக்ட்ரீஷியனோ தொழிற்சாலைக்கும் சரி குடும்பத்துக்கும் சரி மிகவும் பயன்படுகிறவர். ஆனால் அவருக்கு உரிய கௌரவம் கிடைப்பதில்லை. திறனை வளர்த்துக்கொள்வதில் அசட்டை தென்படுகிறதென்றால் காரணம் இதுதான். இது அடியோடு மாற பாரத நாட்டில் உழவுக்கு வந்தனை செய்வது போல தொழிலுக்கும், தொழில் திறனுக்கும் அதாவது கை நுணுக்கத்துக்கும் ஊரார் கையெடுத்துக் கும்பிடும் வந்தனை தேவை. அந்த மனப்பான்மை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.” என்றார் அமைச்சர் ரூடி. உண்மைதானே?

திரைப்பட இயக்குநர் நடிகர் தங்கர் பச்சான் பன்னிரண்டாம் வகுப்பு மாணவரிடம், எதுக்குப் படிக்கிறே?” என்று கேட்டதற்கு அப்பத்தான் ஏசி ரூம்ல உக்காரும் வேலை கிடைக்கும்” என்று பதில் கிடைத்தது. தங்கர் பச்சான் இந்த மனப்பான்மைக்கு ஆசிரியர்கள் பொறுப்பு என்கிறார். ஆசிரியர், மாணவர், பெற்றோர், ஊர் என்று எல்லாரும் ஆரோக்கியமான மனப்பான்மைக்கு மாறும் காலம் தொலைவில் இல்லை.

 

கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின்படி இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதில் கீழ்க்காணும் இளமறிவியல் பட்டப்படிப்புகள் உள்ளன.

இளமறிவியலில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல், பட்டுவளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை போன்ற படிப்புகள் உள்ளன. இளம் தொழில் நுட்பத்தில் வேளாண்மைப் பொறியியல், தோட்டக்கலை, உயிர் தொழில்  நுட்பவியல், உயிர்த் தகவலியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவுபதன்செய் பொறியியல், வேளாண்மைத் தகவல் தொழில் நுட்பம் என பல்வேறு விதமான இளங்கலைப் பட்டப்படிப்புகள் இங்கு உள்ளது.

 

மேற்படிப்பு என்றால் இவையும்தான்!

மருத்துவம், பொறியியல் தாண்டியும் நமது மாணவர்கள் படித்து, பயன்பெற்று உத்யோகம் பெற பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். துணை மருத்துவ படிப்புகளே ஏராளம் உள்ளன. தொழில் ரீதியான பிரச்சினைகளுக்குச் சிகிச்சை, செயற்கை கை கால்கள் பொருத்தும் இயல், காது கேளாமை குறித்த ஆய்வு, கண்சிகிச்சை, மன மறுவாழ்வு, ஊடு கதிர் படமெடுப்பு, அணு மருத்துவம், அறுவை சிகிச்சை அரங்கு, மருத்துவ ஆய்வகம் என எண்ணற்ற படிப்புகள்- எல்லாவற்றுக்கும் பி.எஸ்ஸி இளங்கலை படிப்பு வந்துவிட்டது.

நேச்சுரோபதி, யோகா சம்பந்தமான சிகிச்சை, பல் சுகாதாரம், ரேடியேஷன் சிகிச்சை டெக்னிஷியன், டென்டல் மெக்கானிக்ஸ் போன்ற படிப்புகள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கார்டியாக் பல்மோனரி பெர்ஃபியூஷன், கார்டியோ வேஸ்குலர் டெக்னிக், மெடிக்கல் லேப் டெக்னிஷியன், நியுரோ டெக், அனஸ்தீஸியா டெக் என்று பல்வேறு துறைகளில் பி.ஜி. டிப்ளமா படிப்புகள் உள்ளன. பி.எஸ்ஸி முடித்தவர்கள் இது போன்ற மேற்படிப்புகளைப் படிக்கலாம். எல்லோரும் எம்.எஸ்ஸி கணிதம், இயற்பியல், வேதியியல் என்று படித்து வாத்தியாராகத்தான் போக வேண்டும் என்பது இல்லையே?

மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் டெக், மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ட் ரைட்டிங், பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம் படித்தவர்களும் டெக்னிகல், அனலடிக்கல் கெமிஸ்ட்ரி – இதற்கு பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி எழுதிப் போடலாம். +2 முடித்த பின் ஆப்டீஷியன் + கிரிஃபிராக்ஷனிஸ்டி, ஆர்த்தோ ஆப்டிஸ்ட், ஆஃப்தல்மிக் அசிஸ்டெண்ட், ஹெல்த் ஒர்க்கர் போன்ற பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். டையடிக்ஸில் டிப்ளமா, ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்டில் பிஜி டிப்ளமா, பயோ மெடிக்கல் இன்ஸ்ட்மெண்டேஷனில் பிஜி டிப்ளமா என்று ஏகப்பட்ட படிப்புகள் நமது கல்லூரிகளில் கிடைக்கப் பெறுகின்றன!    – பூமாகுமாரி