திருவெம்பாவை 15

அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த தடாகத்தின் இயற்கையமைப்பை பார்வதி பரமேஸ்வரர்களாகவே அமைந்தமர்ந்து தங்களுக்கு அருள் மழை பொழிவது போல ஒப்புமை நோக்கிய தோழியர் சிவபிரானின் புகழ்தனை தொடர்ந்து பாடுகிறார்கள்.

“ஒற்றைக் காலால் பூச்செடிகள் குளத்தில் ‘சிவதவம்’ செய்கின்றன. அதனால் அவை அதிக அழகு பெற்று விளங்குகின்றன. எம்பெருமானது நினைப்பே சித்தமெங்கும் இருக்கும்படியாக அந்த சர்வேஸ்வரனின் புகழைப் பேசியபடி உறக்கத்திலும் நாவு அசைய,  அவனது கருணை பக்தர்களின் மனதை நெகிழ வைக்க அது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரை அருவியாய்க் கொட்ட வைக்கும் அல்லவோ??!! என்று சிவாநுபவத்தில் திளைக்கும் அவர்கள் ஆச்சரியத்துடன் நவில்வது:

“மண்ணில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து யாரை நாம் வணங்குகிறோம்??!! யார் மீது பக்திப் பரவசத்தால், இப்படிப் பைத்தியமாய் ஆகிவிட்டோம்? அந்த ஆட்கொள்ளி யார்? அவன், வேறு யாருமல்ல, சிவனேதான்! பேரரசனாகிய அவன்பால் இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், ஆட்கொள்ளும் வல்லவனின் திருப்பாதத்தையும் பாடி புஷ்பங்கள் நிறைந்த இந்நீரில் குத்தித்து நீராடுவோம், “என்று தோழிகள் கூறுவதாக இப்பாசுரத்தை அமைத்துள்ளார் மாணிக்க வாசகர்.

ஆர்  கிருஷ்ணமூர்த்தி