இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில்தான். பாரம்பரிய விதை ரகங்களை நேசித்த இவரை, அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

நாடெங்கும் பசுமைப் புரட்சி பரவிய காலத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது பயணத்தைத் தொடங்கினார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு வேலையையும் துறந்தார் நம்மாழ்வார்.  நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் தேவை என்று பலர் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று நிரூபித்துக் காட்டினார் நம்மாழ்வார். நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல. பயோடெக்னாலஜியின் பரிமாணங்களை நன்கு அறிந்தவர். ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால் எதிர்த்தார். நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.

நம்மாழ்வார் நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு – -தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை. விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். எங்கு சென்றாலும் பொது போக்குவரத்தையே பயன்படுத்தினார். மற்றவர்களிடம் அதையே வலியுறுத்தினார்.