திருப்பாவை 15

கிளி தோற்கும்படியான இனிய மிடற்றோசை உடையவளும் அடியார் குழாங்களைத் திரட்டி அவர்களைக் காண்பதில் ஆசையுடையவளும் சிறிது வாய் வீச்சு உள்ள ஒருத்தியை துயிலிலிருந்து எழுப்புவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.

ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமையுடன் ஆண்டாள் இயற்றிய பாசுரம். இந்தப் பாடலிலும் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் நேரடியாகவும் சிலேடையாகவும் புகழ்வது போல இகழ்தல் படியான நகைச்சுவை ரேகைகள் தெரிகின்றன. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்புவதற்கான மோனோலாக் படலம் முடிந்து விடுகிறது.

தூக்கத்தைத் தொடர நினைத்த தோழியிடம், அவளுக்காக  காத்திருந்த தோழியர் சிடுசிடுக்க “நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?” என்று நக்கல் தொனியில் கேட்கிறாள். தோழிகள் அவளிடம், “நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார்த்துக் கொள் என்று கேலியாகப் பேசி, “குவலயாபீடம் யானையை அழித்த, மற்றைய விரோதிகளான முஷ்டிகன், சாணூரன், போன்றோரை அவர்களது விரோதம் போகுமாறு மாற்று செய்து அழிக்கவல்ல மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்,” என்கிறார்கள்