திருவெம்பாவை

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்
கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை
ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே
பாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:
இனிய காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன.
சிறு பறவைகள் ஒலியெழுப்ப ஆரம்பித்து விட்டன. அவைகளின் ஒலி சிவ சிவ என்று
ஒலிக்கின்றது. ஆலயங்களில் எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள்
அனைவரும் தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை,
மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியைப் பாடினோமே , அது உனது
செவிகளில் விழவில்லையா ??!! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து
ஒரு வார்த்தையாவது சொல்லேன்.
நீ இறைவனை வணங்கும் முறை இதுதானோ? பிரளய காலத்தில் அனைத்து ஜீவ
ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும்
ஒப்பற்ற தலைவனை நாம் பாட வேண்டாமா? உமையொரு பாகனான உத்தமனை நாம்
பாட வேண்டாமா ??!! ஏழைப் பங்காளனை நாம் பாடி மகிழ வேண்டாமா? இன்னும்
என்ன உறக்கம் வேண்டிக்கிடக்கிறது. எழுந்திரு…நங்கையே !!,” என்று உறங்கும்
பெண்ணை தோழியர் எழுப்புகின்றனர்.