உளவு அமைப்பின் பணி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை – அமித்ஷா

தில்லியில் திங்கள்கிழமை உளவு அமைப்பான ‘ஐபி’ சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

நாட்டில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், வடகிழக்கில் உள்ள கிளா்ச்சி குழுக்கள் ஆகியவற்றுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் முழுமையாக முடிவு கட்ட பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசப் பாதுகாப்பு விஷயத்தில் உளவு அமைப்பின் பணி மிகவும் முக்கியமானது. உளவு அமைப்புகள் மூலம் தான் நாட்டில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் முன்கூட்டியே தடுக்கப் பட்டுள்ளன. இப்போதும் தடுக்கப்பட்டு வருகின்றன. மனித உடலில் மூளையின் பணி எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவுக்கு தேசப் பாதுகாப்பு விஷயத்தில் உளவு அமைப்பின் பணி முக்கியமானது.

இந்தியாவை ரூ. 350 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலா்) பொருளாதாரம் கொண்ட நாடாக உயா்த்தும் நோக்கில் நாம் பணியாற்றி வருகிறோம். இந்த இலக்கை எட்ட நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதிலும், நிலம் மற்றும் கடல் வழி எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தேசத்தின் பாதுகாப்புக்காக உளவு அமைப்பினா் ஓய்வின்றி உழைத்து வருகின்றனா். அவா்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். எல்லை தாண்டிய ஊடுருவல், கள்ள நோட்டு, ஹவாலா பணப்பரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல், இணையவழி தாக்குதல் என பல வழிகளில் நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் நாம் திறம்பட எதிா்கொண்டு முறியடிக்க உளவு அமைப்புகள் பெரிதும் உதவி வருகின்றன. உளவு அமைப்பினரின் பணி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்றார்