திரும்பவும் தப்பு செய்யாதீங்க – பாகிஸ்தானுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

”மீண்டும், 1965, 1971ம் ஆண்டுகளில் செய்த தவறை, பாகிஸ்தான் செய்தால், அந்நாடு சிதறுண்டு போவதை தடுக்க முடியாது,” என்று, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்து
உள்ளார்.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கூட்டங்களை, பா.ஜ., நடத்தி வருகிறது.

 பீஹார் மாநிலம், பாட்னாவில் நேற்று நடந்த கூட்டத்தில், மத்திய ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், ஜம்மு – காஷ்மீரை ரத்தம் சொட்ட வைத்து வந்த, புற்றுநோயை போன்றது தான், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370. தேசத்துக்கான கட்சி என்ற வகையில், இந்த பிரச்னையில், பா.ஜ., எப்போதும் தனது கொள்கையை மாற்றிக் கொண்டதில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே, பா.ஜ.,வின் லட்சியம்.

இப்போது, 370வது பிரிவு நீக்கப்பட்டு, வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருப்பதன் மூலம், நாங்கள் நம்பகத்தன்மையும், நேர்மையும் உள்ளவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம். இந்த பிரிவு இருந்ததால் தான், அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தின் கிளைகள் வேர்விட துவங்கின.இப்போது, அதில் இருந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம் விடுபட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக, அந்த மாநிலம் மாற்றப்பட்டுவிடும்.

உண்மையில், அங்கு வசிக்கும் மக்களில் நான்கில் மூன்று பங்கினருக்கு அதிகமோனோர், எங்கள் நடவடிக்கைளை ஆதரிக்கின்றனர். அதனால் தான் கூட்டணிக் கட்சிகளும் எங்களை முழுமையாக ஆதரிக்கின்றன.

காஷ்மீரில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் துாண்டி வருகிறது. எனவே, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை, அந்நாட்டுடன் பேச்சு நடத்தப்படாது. அதுமட்டுமல்ல; ஜம்மு – காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை கருத்தில் கொண்டு, இனி, பாகிஸ்தானுடன் நடத்தப்படும் பேச்சு, பாக்., ஆக்கிரப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும் என்பதையும் நாம் தெளிவுபடுத்தி உள்ளோம்.

கடந்த, 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் செய்த தவறுகளால் ஏற்பட்ட போரின் விளைவுகளை பாகிஸ்தான் மறந்து விடக்கூடாது. அதில், நமக்கே வெற்றி கிடைத்தது. இனியும், அப்படி ஒரு தவறை செய்தால், பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறிவிடும். இதற்காக, நாம் எதையும் செய்யப்போவது இல்லை.

அந்நாடு செல்லும் பாதையே, அதற்கான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அந்நாடு, நம் மண்ணுக்குள் எத்தனை பயங்கரவாதிகளை அவர்கள் அனுப்ப முடியும்; அவர்கள் யாரும் திரம்பிச் செல்ல முடியாது என்பது உறுதி. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.