திருப்பாவை 14

உங்களை எல்லாம் நானே வந்து எழுப்புவேன் என்று முந்திய நாளே வீண் பெருமை பேசிய பெண் இவர்கள் வந்த பின்னும் எழுந்திராமல் உறங்குகின்ற நாவன்மையுடைய ஒருத்தியை இப்பாசுரத்தில் எழுப்புகிறார்கள்.v” நாணமின்றி பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுகிறாயே! கடல், மலை ஆகாயம் போன்ற இயற்கைப் பின்னணிகளில் மட்டும் பொழுது புலர்ந்ததன் அறிகுறிகள் தெரிகின்றனவா என்ன? இல்லங்களின் பின்வாசல் தோட்டத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் அழகாய் மலரத் தொடங்குகின்றன. ஆம்பலிலோ  தங்கள் இதழ்களை மெதுவாக மூடிக்கொள்ளும் காட்சித் தெரிகிறது.  துறவிகள் திருச்சங்கு முழக்கம் செய்யுமுகத்தான் கோயில்களை நோக்கிச் செல்லும் பின்னணி. சங்கு சக்கரம் ஏந்திய தடக்கையனும், தாமரை போன்ற கண்களை உடையவனுமான கண்ணனின் புகழை நெஞ்சில் நிறுத்திப் பாடவா!”என்கிறார்கள்.

“நமது அன்றாட வாழ்வியல் நடைமுறைகளின்போது பிறருக்கு அந்த கணத்தில் வாக்குக் கொடுத்துவிடுவது மிக எளிது. ஆனால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியுமா என ஆய்ந்துத் தெளிந்து பின் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டும். இல்லையேல் அவச்சொல்லே மிஞ்சும்” என்கிற ஆழமான கருத்து இப்பாசுரம் மூலம் புலனாகிறது.