திருப்பள்ளி எழுச்சி 5

“குளிர்ந்த வயல்கள் சூழப்பட்டிருக்கிற திருப்பெருந்துறைக்கு அரசனே“ என்று பக்திப்பெருக்குடன் மாணிக்கவாசகர் இந்தப் பாசுரத்தில் அன்பர்க்கு எளியவனாகவும் அல்லாதார்க்கு அறியவனாகவும் சிவபிரான இருக்கிறான் என்பதை புலப்படுத்த “சிந்தனைக்கும் அறியாய்” என்றார். இங்ஙனம் ஏனையோர்க்கு அரியவனாக இருந்தாலும் கருணை மிகக்கொண்டு, எளிய வந்த தோற்றம் கொண்டு தன்னை ஆட்கொள்ளும் திறம் உடையோன் ஆதலினால் “எம்பெருமான்” என்று குறிப்பிட்டார். இறைவனை இவ்வாறு மூன்று பெயர்கள் தந்து அழைத்த பின்னர், அவனைக் காண்பதற்கு விருப்பம் மிகுதலால், ”நீர், நிலம், நெருப்பு, காற்று, வான் என்கின்ற பஞ்ச பூதங்களிலும் நீயே இருக்கிறாய்! நீ போதலும் வருதலும் இல்லாதவன் என்று இசை விற்பன்னர்கள் பலரும் தமது கீதங்களால் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் ஆக இருக்கிறார். உன்னை நேரே பார்த்தறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. நாங்கள் நேரே காணும்படி வந்து, பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.!எங்களது குற்றங்களை போக்கி   எங்களை ஆட்கொண்டு அருள் புரிவாயாக” என்று சிவபிரானிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

ஆர் கிருஷ்ணமூர்த்தி