திருப்பாவை 25

பெரும்பாலும் கண்ணனுடைய பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகளை ஆய்ப்பாடிப் பெண்கள் அழகுற மொழியும் திறனை முந்தைய பாடல்களில் கண்டுள்ளோம். அப்பெண்களின் கிருஷ்ண பக்தியையும், பால சரித்திரத்தில் அவர்கள் நெஞ்சம் தோய்ந்து ஈடுபட்ட பாங்கினையும் இப்பாசுரமும் உணர்த்தத் தவறவில்லை. முதலில் கண்ணன் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்து கம்சனால் கொல்லப்படுவான் எனப் பயந்து, திருவாய்ப்பாடியில் விடப்பட்டு யசோதை நந்தகோபன் மகனாய் மறைந்து வளர்ந்த கதையினை கூறத் தொடங்குகிறார்கள். இதனைப் பொறுக்காத கம்சன் கண்ணனைக் கொல்ல முயன்றான். அதனை வீணாக்கி அவன் வயிற்றில் நெருப்பாக நின்றான் கண்ணன்.

உலகில் உள்ள அனைத்தையும் தனது சங்கல்பத்தாலேயே நியமிக்கிறவன் கண்ணன். நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை அவன் பிறந்தபோதே தரித்து இருப்பதை கண்டு அஞ்சிய பெற்றோர், “கண்ணா! இவற்றை மறைத்துக்கொள்” என்று கோரிக்கை விடுத்தனர். அவனும் தாய், தந்தை சொல் கேட்டு நடந்தான். அவனது பிறப்பு, வளர்ப்பு, செயல்கள் எல்லாமே இனிமையானவை. அவனை அடைவதற்கு ஏதேனும் தடை இருந்தாலும் தங்கள் வருத்தம் கெடும்படி வாழ்வித்து மகிழ்விக்கப் பிரார்த்திக்கிறார்கள் தோழிகள்.