திருக்குறளில் அறம், பொருள், இன்பம் பற்றி எழுதிய வள்ளுவர், ‘வீடு’ பற்றி எழுதாதது ஏன்?; பரதன் பதில்கள்

திருக்குறளில் அறம், பொருள், இன்பம்பற்றி எழுதிய வள்ளுவர்,
‘வீடு’ பற்றி எழுதாதது ஏன்?
– வெ. சியாமளா, தருமபுரி

அறத்தின் (நியாயமான) வழியில் பொருள் சம்பாதித்து அறத்தின் (நெறிமுறைக்கு உட்பட்டு) வழியே இன்பமும் அனுபவித்தால் ‘வீடு பேறு’ ஒருவனுக்குத் தானாகவே கிடைக்கும் என்று வள்ளுவர் கருதியிருப்பாரோ…!

மந்திரங்களை மனதுக்குள் சொல்வது நல்லதா? உரக்கச் சொல்வது நல்லதா?
– இராம. கார்வேந்தன், கோட்டையூர்

அவரவர் விருப்பப்படி மனதுக்குள்ளேயோ, உரக்கவோ சொல்லலாம். உதடுகள் மட்டும் அசைய பிறர் காதில் விழாதபடியும் சொல்லலாம். பொதுவாக மனதுக்குள் சொல்வதே சிறந்தது.

நாடாளுமன்றத்தில் நான் பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்கிறாரே ராகுல்?
– பி. வாசு, சேலம்
ஐயோ சாமி, நீங்கள் பேசவும் வேண்டாம்… பூகம்பம் வெடிக்கவும் வேண்டாம்.

* சினிமா தியேட்டர்களில் ‘தேசிய கீதம்’ – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி?
– பா. வசந்தன், கன்யாகுமரி

வரவேற்கப்பட வேண்டியதே. நம்ம நாடு காஷ்மீர் முதல் குமரி வரை ஒன்றுதான் என்ற உணர்வு கொஞ்சம் மேம்படட்டுமே!

சின்னத் திரையின் (டிவி) மூலம் குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா?
– ஆ. சாருமதி, குரோம்பேட்டை

நிச்சயம் காண முடியாது. நான்கு சுவர்களுக்குள் பேசவேண்டிய அந்தரங்க விஷயங்களை ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவது பிரச்சினைகளை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்யும்.

* கிராமங்கள் அதிகமுள்ள இந்தியாவில் ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனை சாத்தியமா?
– க. கோபி, ஆழ்வார் திருநகரி

செல்போன் வந்த புதிதில் வயதான பெரியவர்களும் கிராமத்து மக்களும் அதைப் பயன்படுத்த சிரமப்பட்டார்கள். இப்போது பெருவாரியான மக்களால் பயன்படுத்த முடிகிறதே! அதுபோல பணப் பரிமாற்றத்திற்கு டெபிட் கார்டு, நவீன சாதனங்கள் பயன்படுத்துவது பழக்கமாகி விடும்.

ஓ. பன்னீர்செல்வம், தம்பித்துரை, செங்கோட்டையன், பண்ருட்டியார் உள்பட மூத்த அதிமுக பொறுப்பாளர்கள் கூட சசிகலாவை பொதுச் செயலாளராக வேண்டுகிறார்களே?
– கே. பரந்தாமன், அரக்கோணம்

யாரோ ஒருவர் முகநூலில், ‘சிலர் ஆசைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்… ஒரு மானம் இல்லை அதில் ஈனம் இல்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்’ என்ற பழைய எம்.ஜி.ஆர். திரைப்படப்பாடலை எடுத்துப் பதிந்துள்ளனர்.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.