தமிழிசை தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றார்

ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்தவர் இ.எஸ்.எல். நரசிம்மன்.பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தததையடுத்து தமிழக பாரதீய ஜனதா கட்சித்தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை (வயது 58), தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டார்.
                                                                                                                                                                                                            அதை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த கண்கவர் விழாவில், தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை பதவி ஏற்றார். அவருக்கு அந்த மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெயரை தமிழிசை பெறுகிறார்.

ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட தமிழிசைக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மாநில மந்திரிகள் மற்றும் தலைவர்கள், உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர் கவர்னர் பதவி ஏற்றதும், மேடையில் இருந்து இறங்கி கீழே வந்த தமிழிசை, முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.

முன்னதாக விமான நிலையத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய தமிழிசை, “தெலுங் கானா மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது எனக்கு தெரியும். அதற்கேற்ப நான் செயல்படுவேன். இங்குள்ள கலாசாரத்தையும், பொதுமக்களையும் புரிந்து வைத்திருப்பதால் இங்கு பணிபுரிவதில் எனக்கு சிரமம் இருக்காது” என கூறினார்