தமிழகத்திற்கு வார்தா புயல் தந்த ஞானம் சுதேசி மரங்களே சுத்த வீரர்கள்!

சென்னையிலும் அதைச் சுற்றிய 3 மாவட்டங்களிலும் வீசிய வார்தா புயல் 4,000 மரங்களை சாய்த்ததாகவும் 10லிருந்து 15 பேரை பலி வாங்கி விட்டதாகவும் ஊடகச் செய்திகள் உறுதி செய்திருக்கின்றன.

மாநில அமைச்சரவை இருமுறை கூடியும் மந்திரிகள், அதிகாரிகள் சாலையில் ஓடியும் புயல் நிவாரண வேலைகளை கவனித்து வருகின்றனர்.
24 மணி நேரத்தில் 28லிருந்து 40 செ.மீ மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வுமையச் செய்திகள் கூறுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில ஏரிகள் நிரம்பி வழியும் அபாயம் உள்ளதாக கலைஞர் டிவி கவலைப்படுகிறது.

சாய்ந்த மரங்கள், காற்றில் தூக்கியெறியப்பட்ட கூரைத் தகடுகள், ஒரு காரையும் பஸ்ஸையுமே புயல்காற்று அடித்துச் செல்லும் லைவ் காட்சிகள் புயலின் தாண்டவத்திற்கு சாட்சிகள்.

ஆங்காங்கே விழுந்த மரங்கள், கார், ஆட்டோ, மின் வழித்தடம் (கம்பி) மீது டிவிக்கள் ஒளிபரப்பின.
மனித உயிர்களும் மரங்களின் உயிர்களும் சமமில்லை என்றாலும், மனிதனை விட மரங்கள் மானுட உயர்வுக்கு அதிக பங்காற்றுகிறது என்பதை சொல்ல வேண்டிய நேரம் இது.

3000த்திலிருந்து 4000 மரங்கள் புயலினால் வேரோடு சாய்ந்தன. இவைகளை உற்று நோக்கினால் உண்மை ஒன்றுபுரியும். சாய்ந்த மரங்களில் பெரும்பாலானவை பாரஸ்ட் பயர், டிசம்பர் பூ மரங்கள். இவற்றின் பூர்வீகம் வெளிநாடு. இவைகளின் சிறப்பு அம்சம், இவைகளிலிருந்து குப்பை பெருமளவு விழாது. இவைகளை கால்நடைகள் உண்ணாது. ஏன் இவைகளில் பறவை கூட கூடு கட்டாது.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நம் மண்ணுக்கு சம்பந்தமில்லாத மரங்களே வேரிழந்து வீழ்ந்துள்ளன. உள்ளூர் மரங்களான மா, பலா, புங்கன், வேம்பு, தென்னை, பனை மரங்கள் புயலைத் தாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் என்றால் குறும்பு செய்வது, பொருட்களை உடைப்பது, சுதந்திரமாக திரிவதுதான். இதுதான் குழந்தைகளின் இயல்பு. இது இல்லாமல், ஒன்றுமே செய்யாமல் ஒரு குழந்தை இருக்குமானால் அது குழந்தையல்ல. குழந்தையின் வடிவிலுள்ள பெரிய மனுஷன்தான். இதுபோலத்தான் மரங்களும். பழம் தரவேண்டும். அதனால் பறவைகளை ஈர்க்க வேண்டும். பூ பூக்க வேண்டும். அதனால் பூச்சிகளை ஈர்க்க வேண்டும்.

இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து சாலைகளில் மெத்தை போட்ட மாதிரி உணர்வு ஏற்பட வேண்டும். நான் வாழும் கோவை லட்சுமி நகரில் 5 வருடங்களுக்கு முன் அடல்ஜியின் 85வது பிறந்த நாளன்று 85 மரங்களை நட்டேன். அதற்கு முன் ஒரு சிறிய பிளாஷ்பேக்! நகர் வடிவமைக்கும் ஒரு நிபுணரிடம் மரங்கள் நடுவது பற்றிய ஒரு ஆலோசனை பெற்று எங்கள் நகர் மரம் தெரிவு செய்தல், நடுவதை தீர்மானித்தோம்.

பழம் தரும் மரம், பூ பூக்கும் மரம், தலைக்கு மேலே செல்லும் High Tension கம்பிகளை தொடாமல் குட்டையாக வளரும் மரம், வீட்டு கீழ்நிலை நீர்த்தொட்டி முன் வேர் செல்லாத மரம் என வகையாகப் பிரித்து, காட்டிலாகாவிடமிருந்து வீரியமான நாற்றுகளை வாங்கினோம். 85 குழியெடுத்து மண்புழு உரம், இயற்கை கழிவுகளை போட்டு ஒரு வாரம் ஆறப்போட்டு ஒவ்வொரு வீட்டு அருகிலும் அந்த வீட்டு மகளிர், பெண் குழந்தையை விட்டு மரக்கன்றுகளை நட்டோம். அவர்கள்தான் மரங்களை பேணிப் பாதுகாக்க அதிக அக்கறை கொள்வார்கள் என்ற எங்கள் நம்பிக்கை இன்று உண்மையாகி 85 கன்றுகளும் மரமாகி ஓங்கி வளர்ந்துள்ளன. தலைவர்கள் பிறந்த நாளில் நடும் மரம் சடங்கு மட்டுமே. கேட்க நாதியற்று ஊற்ற தண்ணீரற்று ஒரு மாதத்தில் நட்டமரம் சடலமாகி விடுகிறது. மரம் ஜடமல்ல; ஒரு உயிர். மனிதனின் உயிருக்கு நிகரான உயிர்.

மரத்தை வெட்டிப் பிளந்தால் அதன் மையப்பகுதி கருப்பாக இருக்கும். இது நாம் வெளியேற்றிய கார்பன் டை ஆக்சைடு. ஒவ்வொரு மரமும் தன் வாழ்நாளில் ½ டன் கார்பன்-டை- ஆக்ஸைடை உட்கொள்கிறது. நமக்கு இருக்கும் இரண்டு நுரையீரலில் ஒன்றை மரம் தனதாக்கிக் கொண்டு நமக்கு ஆக்சிஜனை தந்து நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை தனக்கு எடுத்துக் கொள்கிறது.

பழமும் காயும் பூவும் பூத்துக் குலுங்குவதும், சருகுகளும் பூக்களும் விழுந்து பறவைகளின் ஓசைகளும் எச்சங்களும் சேர்ந்திருப்பதே மரத்தின் அழகு. இவைகளற்ற மரம் உணர்வற்ற, உயிரற்ற, பேட்டரியால் இயங்கும் ரோபோ போன்றது. இதற்கு மரம் வைக்காமலே இருந்து விடலாம்.

சென்னை வார்தா புயலும் கடலூர் தானே புயலும் இந்திய மண்ணின் மர மைந்தர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேரோடு வேறு தேச மரங்கள்தான்! இதில் கூட தேசியம்தான் வெல்கிறது பார்த்தீர்களா?

கருப்புப் பணம் மட்டுமா ஒழிந்தது?

ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் அறிவித்து 6 வாரங்கள் ஆகிவிட்டது.

இந்த அறிவிப்பு ஆச்சரியத்தையும், ஒரு சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தாலும் நாட்டின் 98 சதவீத மக்களால் வரவேற்கப்பட்டது!

அறிவிப்பின் சாதகபாதகங்கள் பெருமளவு விவாதிக்கப்பட்டாலும், இந்த ‘ஆபரேஷனின்’ பெரும் சவாலாக வங்கிகளில் பணம் எடுப்பதைவிட, ஏடிஎம்மில் பணம் எடுக்க வரிசையில் நிற்பதைவிட, அன்றாடம் சந்திக்கும், காய்கறி, மளிகை சாமான், துணி அயர்ன் செய்பவர்கள், பால் பூத் இவைகளில் பண பரிவர்த்தனை செய்வதில் உள்ள இடைஞ்சல்கள் தான் எதிர்க்கட்சிகளால் பூதாகாரமாக விமர்சிக்கப்படுகிறது.

125 கோடி மக்கள் உள்ள நாட்டில், பணமில்லா வர்த்தகம், கண்சிமிட்டும் நேரத்தில் வந்துவிடும் என எதிர்பார்ப்பது அறிவீனமே.

வங்கிகளும், அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், ‘பணமில்லா வர்த்தகத்தை’ மக்களுக்கு சொல்லித்தர ஆரம்பித்துள்ளதும் அதன் வேகம் அதிகமாக இருப்பதும் ஆறுதலான செய்தி.

ஆனால், இந்த ‘டிமானிடைசேஷன்’ எதற்காக செய்யப்பட்டதோ அதன் நோக்கத்தை சிதைக்கும் புல்லுருவிகள் பற்றிய செய்திதான் நமக்கு அதிர்ச்சியூட்டுகிறது.
மூட்டை மூட்டையாக, முலயாம் சிங்கும் மாயாவதியும் மம்தா பானர்ஜியும் கருணாநிதியும் மாறன்களும் சோனியாவும் கருப்புப் பணத்தை கட்டிவைத்திருப்பதை யாரும் சொல்லாமலே தெரியும்!

ஆனால், ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் மாதாந்திர சம்பளக்காரர்களும், வரிகட்டி சம்பாதித்த பணத்துக்கு உரிய மரியாதையும் மதிப்பும் தர வேண்டும் என்கிற அரசின் குறிக்கோளை நொறுக்கிக் போடும் விதமாக, சில வங்கி அதிகாரிகளும் ஹவாலா புரோக்கர்களும் கருப்புப்பணத்தை மாற்றும் யாரும் பொறுத்துக் கொள்ளமுடியாது.
சில தனியார் வங்கிகள், மற்றும் சில தேசிய மயமான வங்கிகளின் மேலாளர்கள், ஏன் பெங்களூரில் ஒரு ரிசர்வ் வங்கி அதிகாரி கூட, இந்த மாபாதகத்தில் ஈடுபட்டு ‘கமிஷனுக்காக’ நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு ஈடான நயவஞ்சகத்தில் ஈடுபட்டார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

ஆனால், இம்மாபெரும் பொருளாதார புரட்சியை மத்திய அரசு மிக வலுவாக எடுத்துச் செல்வது சந்தோஷமளிக்கிறது. தகவல் வரும் இடங்களிலெல்லாம், ‘ரெய்டு’ நடத்தி தினசரி ‘இந்த தேச விரோதிகளை’ கைது செய்த வண்ணம் இருக்கிறது மத்திய அமலாக்கத்துறை.

சிலர் கேட்கிறார்கள், புழக்கத்திலிருந்த 14லீ லட்சம் கோடி செல்லாத பணத்தில் 12லீ லட்சம் கோடி வங்கிக்குள் வந்து விட்டதே! எங்கே இருக்கிறது கருப்புப் பணம் என்கிறார்கள்!

வெள்ளையோ, கருப்போ, புழக்கத்தில் இல்லாமல் பதுங்கி இருந்த பணம், வங்கிக்குள் வந்து இனி புழக்கத்துக்கு வருமல்லவா? அது முதல் வெற்றி!

2006ல் 36 சதவீதம் இருந்த 500, 1000 நோட்டுக்களை 86 சதவீதத்துக்கு அச்சடித்து அச்சடித்து கருப்புப்பணத்தை உருவாக்கியது காங்கிரஸ் அரசு.
இனி, Cashless Transaction மூலமாக அதாவது வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்யப்போவது, கருப்புப்பணம் இனி உருவாகாமல் தடுப்பதற்கான கால்கோள் விழா!

கருப்புப்பணத்தை ஒழித்தோமா இல்லையா என்பதையும் கருப்புப் பணம் உருவாகாமல் தடுக்க வழிவகை செய்திருக்கிறோமா இல்லையா என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள். காங்கிரசோடு கும்மாளமடிக்கும் எதிர்க்கட்சி நண்பர்களே! உங்கள் பண மூட்டைகள் எடைக்கு போக இன்னும் ஓரிரு வாரங்கள் தான் உள்ளது!