ததீசி காட்டும் தன்மை

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அவ்வப்போது போர் ஏற்படும். ஒரு சமயம் விருத்திராசுரன் தேவர்கள் மீது போர் தொடுத்தான். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற முடியவில்லை.

தேவர்கள் அனைவரும் ஸ்ரீ விஷ்ணு பகவானை சரணடைந்தனர். ‘‘உயிரோடு இருக்கிற போதே தன் முதுகெலும்பைத் தர முன்வரும் ஒரு மனிதனின் முதுகெலும்பிலிருந்து ஒர் ஆயுதம் செய்து அதனைக் கொண்டு போரிட்டால் தேவர்கள் வெற்றி பெறுவது உறுதி’’ என்று பகவான் கூறினார்.

எனவே உயிரோடிருக்கும் போதே முதுகெலும்பைத் தர முன்வரும் ஒரு மனிதரைத் தேடி பூலோகம் வந்தான் தேவேந்திரன். ததீசி என்ற தவமுனிவர்  முன்னிலையில்  தனது கோரிக்கையை வைத்தான் இந்திரன். ‘‘உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுமே இறந்து போன பின் அவற்றின் உடல் உறுப்புகள் ஏதேனும் ஒரு காரியத்திற்குப் பயன்படுகின்றன. ஆனால் மனித உடல் மட்டுமே எதற்குமே பயன்படாமல் அழிந்து போகிறது. அத்தகைய மனித சரீரத்துக்கு ஒரு தேவ காரியத்திற்கு உதவும் வாய்ப்பைத் தந்திருக்கிறீர்கள்.

‘‘உயிரோடு இருக்கும்போதே முதுகெலும்பை எடுக்க வேண்டும் என்று கூறுவதால் நான் ஜீவ சமாதியில் அமர்ந்து விடுகிறேன். அப்போது என் தேகத்திற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் போய்விடும். அப்போது நீங்கள் என் முதுகைப் பிளந்து முதுகெலும்பை எடுத்துக் கொள்ளலாம்’’ என்று பகர்ந்தார் ததீசி. அவர் ஜீவசமாதியில் அமர்ந்ததும், அவரது முதுகெலும்பை எடுத்து வஜ்ராயுதம் என்றதோர் அரிய ஆயுதத்தைத் தயார் செய்தான், விஸ்வகர்மா என்ற தேவதச்சன். அந்த ஆயுதத்தைக் கொண்டு இந்திரன் விருந்திராசுரனுடன் போரிட்டு வென்றான்.