ஜெகன்னாதர் கோவிலுக்குள் நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கைது

ஒடிசாவில், புரி ஜெகன்னாதர் கோவிலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசாவின் புரி நகரில், 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆகம விதிகளின்படி, ஹிந்துக்கள் அல்லாத நபர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெகன்னாதர் கோவிலுக்குள் தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களில் சிலர், நம் நண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக, கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இது குறித்து புரி கூடுதல் எஸ்.பி., சுஷில் மிஸ்ரா கூறுகையில், ”பிடிபட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்களின் பாஸ்போர்ட்டை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டோம். ”இதில் நான்கு பேர், ஹிந்துக்கள் என்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க பரிந்துரைத்துள்ளோம். மற்றவர்கள் மீது சட்டவிரோதமாக கோவிலுக்குள் செல்ல முயன்றதற்கு வழக்குப் பதிவு செய்ய உள்ளோம்,” என்றார்.