64,000 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்திற்கு, 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய, அரசு அனுமதித்து உள்ளதாக, வர்த்தக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதற்காகவும், விலையை சீராக வைத்திருப்பதற்காகவும், கடந்த 2023 டிசம்பர் 8ம் தேதியன்று, மத்திய அரசு, மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 எனினும், பிற நாடுகளிடம் இருந்து வரும் கோரிக்கை அடிப்படையில், வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என கூறப்பட்டது. அந்த வகையில், தற்போது வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு, வெங்காயம் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துஉள்ளது. என்.சி.இ.எல்., எனும் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, வங்கதேசத்திற்கு 50,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 4 வரையான காலத்தில், 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுஉள்ளது. மதிப்பின் அடிப்படையில், வங்கதேசம், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு அதிகளவில் செய்யப்படுகிறது.