ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் வெளிநாட்டு துாதர் குழு ஆய்வு

ஜம்மு – காஷ்மீரின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக வந்த ஐரோப்பிய நாடுகள் உட்பட, 25 நாடுகளுக்கான துாதர் குழுவினரிடம், அப்பகுதியின் பாதுகாப்பு நிலவரம் குறித்து, ராணுவ அதிகாரிகள் நேற்று விளக்கினர்.

ஜம்மு — காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆக., 5ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், ஜம்மு — காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தான், பல்வேறு சர்வதேச அமைப்புகளில் பிரச்னை எழுப்பி வருகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் கென்னத் ஜஸ்டர் உட்பட, 15 நாடுகளின் துாதர்கள், கடந்த மாதம், ஜம்மு — காஷ்மீர் சென்று, நிலைமையை ஆய்வு செய்தனர்.இந்நிலையில், 25 நாடுகளின் துாதர்கள் குழு, இரண்டு நாள் பயணமாக, ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் வந்தது. ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகளின் துாதர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள், ஸ்ரீநகரில் உள்ள பதாமி பாக் ராணுவ, ‘கன்டோன்மென்டு’க்கு நேற்று வந்தனர். அங்கு, ஜம்மு – காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து, ராணுவ அதிகாரிகள் விரிவாக விளக்கினர். அதன் பின், துாதர்கள் குழு, ஜம்முவுக்கு புறப்பட்டு சென்றது.

அங்கு, மேலும் சில கள ஆய்வுகளில் அக்குழு ஈடுபட்டது. ஜம்மு – காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல்!ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின், அங்கு முதல் அரசியல் நடவடிக்கையாக, காலியாக உள்ள பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல், எட்டு கட்டங்களாக, ஓட்டுச் சீட்டு முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜம்மு – காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி ஷைலேந்திர குமார் நேற்று தெரிவித்தார்.