பிப்ரவரி 13 : சர்வதேச வானொலி தினம் – பொங்கும் பூம்புனல்

‘சுதந்திர பாரதம் எனும் இந்தியா மலர்ந்துவிட்டது’’ செய்திகள் வாசித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். ‘‘மகாத்மா காந்தியின் பூத உடல் யமுனைக் கரையை நெருங்கிவிட்டது’’ ஆங்கிலத்தில் செய்திகள் வாசித்தவர் மெல்வில் டி.மெல்லோ. இவையெல்லாம் என் தந்தை சொல்லி நான் கேள்விப்பட்டவை. பின்னர் 1964 மே மாத லீவில் பார்க்கில் விளையாடும் போது நேருஜி காலமான செய்தி அங்கிருந்த வானொலி ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது காதில் விழுந்தது.

சென்னை வானொலி நிலையம் ‘வானொலி’ என்ற தமிழ் மாத இதழ் வெளியிட்டதுண்டு. வாரா வாரம் ஞாயிற்றுகிழமை திருச்சி வானொலி ஒலிபரப்பிய நாடகங்கள் (அரைமணியில் இரண்டு), தினமும் காலையில் ஒலிபரப்பாகும் பக்தி இசை, கம்பன் கழக விழாக்கள் போன்றவற்றின் தொகுப்புரைகள் எல்லாம் தமிழிலும் ஆன்மிகத்திலும் நாட்டத்தைக் கொடுத்தன, வளர்த்தன.

நாடகங்களில் ஆடிய பாதம் என்ற நகைச்சுவைப் பாத்திரமும், பார்வதி ராமனாதன் என்ற பெண்மணியின் குரல் வளமும் பக்கம் இன்றும் நெஞ்சில் நிற்கின்றன. கிரிக்கெட் 5 நாள் போட்டி என்றால் (அப்பொழுதெல்லாம் 50–50, 20–20 ஒன்றும் வரவில்லை!). வர்ணனையாளர்கள் புனையும் சொற்சித்திரங்களாலேயே நம் கண்முன் ஆடுகளத்தைக் கொண்டு வந்துவிடுவார்கள்.

1978 ஆரம்பித்து 3 வருடங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வந்த ‘பொங்கும் பூம்புனல்’ நிகழ்ச்சியில், நிறைய இலக்கியம், கொஞ்சம் சினிமா உண்டு. இலங்கை வானொலியில் ஒலித்த ராஜா, மயில் வாகனன், அப்துல் ஹமீது போன்ற குரல்கள் அற்புதமானவை!

இன்று அப்துல் ஹமீதைத் தவிர மற்றவர்கள் எங்கே? 1980ல் சென்னை வானொலி நிலையத்தார் பல பரிசோதனைகளை செய்துபார்த்தார்கள். அவற்றில் ஒன்று, வானியலை அறிமுகப்படுத்தும் முயற்சி. நாம் நம் வீட்டில் மொட்டை மாடிக்கு டிரான் சிஸ்டருடன் சென்று விடவேண்டும். ஆகாயத்தில் எந்தெந்த நட்சத்திரக் கூட்டங்கள் எங்கெங்கு உள்ளன என்பதைத் தெளிவாக விளக்குவார்கள். ‘வானொலி சிறுவர் சங்கம்’ தரும் நிகழ்ச்சிகள் சிறார்களை துள்ளிக் குதிக்க வைத்தவை. ர.அய்யாசாமி முதல் வானொலி அண்ணா. அடுத்து பலர். 80களிலும் 90களிலும் தென்கச்சி சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ தினமும் கேட்டேயாக வேண்டும் எனக்கு.

வயலில் வேலை செய்து கொண்டிருந்தாலும் முடி திருத்தம் செய்து கொண்டிருந்தாலும் காரில் பயணிக்கும்போதும் என்றும் நம் பணிகளுக்குப் பாதிப்பின்றி நல்ல ரசனையைக் கூட்டி சுமையைக் குறைக்கும் வானொலிக்கு நிகர் வானொலி தான்.