ஜம்மு-காஷ்மீரில் 1947 ல்! மானம் காக்க மரணித்த மாதரசிகள்!

 

பாரத நாடு சுதந்திரம் அடைந்த நேரம். பாகிஸ்தான் ராணுவத்துடனும் ஆயுதமேந்திய பஷ்தூன் பழங்குடி இனத்தவருடனும் சேர்ந்து கொண்டு காஷ்மீர் மன்னருக்கு துரோகம் செய்த முஸ்லிம் படைவீரர்களும் தளபதிகளும்  ராஜோரியை முற்றுகையிட்டார்கள். நான்கே நாட்களில் 1947 அக்டோபர் 26 அன்று துணை பிரதமர் சர்தார் படேலுடைய துணிவான, துரிதமான முயற்சியால் காஷ்மீர் பாரதத்துடன் இணைந்தது. நம் நாட்டு ராணுவம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது.  இதனிடையில் கலவரம் காஷ்மீரின் பல உட்பகுதிகளுக்கும் பரவிக்கொண்டிருந்தது. குறிப்பாக ஜம்முவின் ராஜோரியை நோக்கி முன்னேறிய பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இயலாமல், தாசில்தார் தன்னுடைய 10,20 காவலர்களுடன் தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டார்.

ஆனாலும், தன்மானமிக்க பொதுமக்கள், பெரியவர்களும் இளைஞர்களும் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் துணையுடன் முழுமூச்சுடன் தடுத்து நிறுத்த முயன்றனர். நிராயுதபாணியான ஹிந்துக்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும்?

1947 நவம்பர் 11 தீபாவளி அன்று மாலை, ராஜோரி கயவர்கள் வசமானது. சுமார் 6,000 ஆண்கள் சிறை பிடிக்கப்பட்டு திறந்த வெளியில் (இன்றைய ராணுவ விமான தளம்) நிறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சுமார் 3,500 பெண்களும் சிறைபிடிக்கப்படலாம் என்ற நிலை. கயவர்கள் கரங்கள் தங்களைத் தீண்டுமுன் ஒரு பொது இடத்தில் அத்தனை பெண்களும் கூடி விஷம் குடித்து உயிரை விட்டனர். மேலும் பலர் அருகில் இருந்த விவசாயக் கிணறுகளில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். அந்த மாதரசிகளின் நினைவாக 1961-62 ல் ‘தியாகிகள் (பலிதான்) பவனம்’ நிறுவப்பட்டுள்ளது. இன்றும் சந்ததியினர் உலகில் எங்கிருந்தாலும் தீபாவளியன்று ராஜோரி நகருக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். அவர்கள் பல ஆண்டுகள் வரை தீபாவளி கொண்டாடாமல் இருந்தார்கள். அந்த பவனம் அமைக்க ஷேக் அப்துல்லா முட்டுக்கட்டை போட்டது வரலாறு. ஆனால் மக்கள் ஜெயித்தார்கள்.