சித்தூர் ராணி பத்மினி கற்பின் கனல்!

‘பத்மாவதி’ என்ற பெயரில் சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக வெளிவர உள்ளது. திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

முதலில் ‘பத்மாவதி’ வாழ்க்கை வரலாற்றை

நாம் தெரிந்து கொள்வோமே!

சித்தூர் ராணி பத்மினியின் பேரழகைப் பற்றிக் கேள்விப்பட்ட உடனேயே காமக் கொடூரன் அலாவுதீன் கில்ஜி, அவளை அடையத் துடித்தான்.

ராஜபுதனத்து மண் – மானமிக்க மண். அந்த மண்ணின் மிகச் சாதாரண பெண் கூட மாற்றானின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள். அப்படியிருக்க, மறவர் குல மங்கை – மன்னன் ரத்தன்சிங்கின் பட்டத்து அரசி பத்மினியை மாற்றான் ஒருவன் காமுற்றுப் படையெடுத்து வருகிறான் என்றால் –

மண்ணைப் பறி கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர, தங்கள் மானத்தைப் பறி கொடுப்பார்களா? போராட முனைவார்களேயன்றி பணிந்து போவார்களா? 1303 ஜனவரி 29 அன்று  அலாவுதீனின் வெறிப்படை சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டது. மண்ணாளும் மன்னவனாக மண்ணாசை கொண்டு முற்றுகையிடவில்லை அக்கயவன்.

மாறாக, பெண்ணாளும் – பிறன்மனை நோக்கும் பேடியாகப் படையெடுத்தான். ஆனால் – கோட்டைச் சுவர்களைக் கடந்து உள்ளே செல்ல இயலாமல் – கோட்டைக்கு வெளியிலேயே காத்திருந்தது முஸ்லிம் படை. ஒன்றல்ல, இரண்டல்ல – ஏழு மாதங்கள் இந்த முற்றுகை தொடர்ந்தது.

குகையிலிருந்து புறப்படும் சிங்கமெனப் பாய்ந்து புறப்பட்டு மாற்றாரோடு மோதத் தயாராக இருந்தான் ரத்தன்சிங். ஆனால் அவனது அமைச்சர்களும் பெரியோர்களும் கயமைத் தனத்துக்குப் பெயர் போன மிலேச்சப் படைகளோடு மோதினால், உயிர் துறக்க வேண்டியது க்ஷத்திரிய வீரர்கள் மட்டுமல்ல, மறவர்குலப் பெண்களின் மானமும் பறிபோகும்.

ஹிந்து அரசர்கள் ஒருவரோடு ஒருவர் மோதும்போது, நமது யுத்த நியதியின்படி பெண்கள், முதியவர்கள், சாதாரண குடிமக்கள், கோயில்கள், பசுக்கள் இவற்றிற்கு எந்த பாதிப்பும் வராதபடி போரிடுவார்கள்.

யுத்த நியதி ஏதுமில்லாத நயவஞ்சக மிலேச்சர்களோ – காட்டுமிராண்டித்தனமாக குலப் பெண்டிரையும் கோயில்களையும் கோமாதாவையும் அழித்து விடுவார்கள். எனவே சாணக்கியத்தனமாகவே கில்ஜி படையைத் திருப்பி அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். இதனாலேயே அடங்கிக் கிடந்தான் ரத்தன் சிங். ஏழு மாதங்கள் ஆகியும் முற்றுகையை ரத்தன்சிங் தாக்குப் பிடித்ததால், சமரசம் பேச அழைத்தான் கில்ஜி.

ஒரு முறை ராணி பத்மினியைக் கண்ணால் காண அனுமதித்தால் போதும்! என் படை திரும்பி விடும்” என்று சமாதானத்துக்கான கோரிக்கையாக வைத்தான் கில்ஜி.

இதுவே கொதிக்க வைக்கிற கோபத்தை ஊட்டினாலும், அமைச்சர்களின் அறிவுரைக்கு இணங்கி, ஒப்புக்கொண்டான் ரத்தன்சிங்.

பத்மினியைப் பார்க்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி ரத்தன் சிங்கோடு சதுரங்கம் விளையாட வருவான் அலாவுதீன். எந்தப்படை வீரர்களின் பாதுகாப்பும் இன்றி இருவரும் தனியே சந்தித்து சதுரங்கம் விளையாட வேண்டும். அப்போது சுவரின் பதிக்கப்பட்டிருக்கும் வெண்கலத் தகட்டில் பத்மினியின் நிழல் உருவம் தெரியும். அதனைக் கண்டு விட்டு திரும்பிவிட வேண்டும் என்பது தான் திட்டம்.

பத்மினி – பெயருக்கேற்றாற் போல சாமுத்ரிகா லட்சணம் வர்ணிக்கும் நான்கு வகைப் பெண்களில் உத்தமோத்தமம் என்னும் உயரிய வகையைச் சார்ந்தவள்.

நாட்டு மக்களின் நலன் கருதி பாமரப் பெண்களின் கற்பு புல்லர்களின் கரங்களில் பறிபோகக் கூடாது என்கின்ற உயரிய எண்ணத்தில், தனது தன்மானத்திற்குச் சற்றே குறைவு ஏற்படும் வகையில் தீட்டப்பட்ட இத்திட்டத்திற்கு பத்மினி இசைந்தாள். அந்தப்புரத்திற்கு வந்தாள் பத்மினி. அந்தப்புர மாடத்தில் யாரும் காண முடியாத இடத்தில் நின்ற அவள் நிழல், மகளிர் நீராடும் நீராழியில் தெரிந்தது. அந்த நிழலின் பிரதிபலிப்பு வெயில் வெளிச்சத்தில் அரசனின் அவை மண்டபத்தில் பதிக்கப்பட்டிருந்த வெண்கலத் தகட்டில் பிரதிபலித்தது.

நிழலைக் கூட அல்ல; நிழல் உருவின் இன்னொரு பிரதிபலிப்பைக் கண்டு தனது காம இச்சையைக் கண்களாலேயே தீர்த்துக் கொண்டான் அலாவுதீன்.

ஒரு நிழல் உருவில் தன் மக்கள் காப்பாற்றப்பட்டாலும், அதற்காக நடைபெற்ற சதுரங்கம் ரத்தன்சிங் மனதில் உறுத்தலை உருவாக்கியது. எப்போது இந்த வெறியனை வெளியேற்றுவோம் என்ற வேகம் உந்த, முஸ்லிம் படையெடுப்பாளர்களின் நயவஞ்சகம் அறியாத ரத்தன்சிங், கில்ஜியை வழியனுப்ப கோட்டை வாயிலுக்கு வந்தான்.

யாரும் அறியாமல் கோட்டைக்கு வெளியே ஒளிந்திருந்த முஸ்லிம் வெறிப்படை ரத்தன் சிங்கைச் சூழ்ந்து கைது செய்து விட்டது.

சொன்ன வாக்கைக் காப்பாற்ற பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் வந்த ரத்தன் சிங்கை நயவஞ்சகன் அலாவுதீன் சிறையெடுத்துச் சென்றான். இதைக் கேட்ட ராணி பத்மினி என்ற கற்புடையாள் கலங்கவில்லை; சீறும் வேங்கையானாள். அதில் உருவானது ஓர் உணர்ச்சி வரலாறு…

மிலேச்சர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போன நயவஞ்சகம், வாக்குறுதிகளைக் காப்பாற்றாது என்பது அவர்களின் வரலாறைப் புரட்டினால் புரியக்கூடிய விஷயம்தான்! இருந்தாலும், மன்னர் ரத்தன்சிங் ஹிந்துவின் இயல்புப்படியே அலாவுதீன் கில்ஜியை நம்பி, அவனை வழியனுப்ப அரண்மனைக் கோட்டை வாசலுக்குத் தன்னந்தனியே வந்தான்.

கணவனுக்காகச் சிதையிலேயே உயிரை மாய்த்துக் கொள்கிற ரஜபுத்திரப் பெண், கணவனை மீட்க முயலுவாள். அப்போது விடுதலைக்கு விலையாக அவள் பேரழகைக் கேட்கலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டி  இருந்தான் கில்ஜி.

அவனுக்குத் தெரியாது – கணவனுக்காக ரஜபுத்திரப் பெண் உயிரைக் கொடுப்பாளேயன்றி, கற்பைக் காவு கொடுக்கச் சம்மதியாள் என்று! கணவனைக் கைது செய்து சென்று விட்டான் காமக் கொடூரன் கில்ஜி என்று கேள்விப்பட்டதும், ரஜபுத்திர மங்கை ராணி பத்மினி சிங்கமெனச் சிலிர்த்தாள். கணவனை மீட்கும் திட்டத்தில் இறங்கினாள்.

கில்ஜியின் பலவீனத்தில் அடித்தே தனது கணவனை மீட்பது என்ற திட்டத்தோடு தனது புதல்வனுக்குப் பெண் வேடமிட்டு, கில்ஜியின் அரண்மனைக்கு அனுப்பினாள். புடவை வாசம் பட்டாலே புல்லரித்துப் போகிறவன் கில்ஜி. அப்படிப்பட்டவன் தன் கனவில் தினம் தினம் உலா வந்து, உணர்ச்சி நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டிருந்த அழகுப் பதுமை ராணி பத்மினி, தனது மஞ்சத்துக்கு வருகிறாள் என்ற செய்தி செவிமடலைத் தொட்டால் என்னாவான்? அவனது சிந்தனை செத்துப் போய்விட்டது. எந்த யோசனையும் அவன் சிந்தனை மண்டலத்தில் எழவில்லை. அந்தப்புரத்தில் ஆசைகளை எப்படி அரங்கேற்றுவது என்ற கனவையே சிந்தனையாகச் சுமந்து வந்த கில்ஜி, உண்மை தெரிந்து சுதாரித்துக் கொள்வதற்கு முன்பே தந்தையை மீட்டு தப்பி விட்டான் ராணி பத்மினியின் மைந்தன்.

இந்த செய்தியும், ராணி பத்மினியின் ராஜதந்திரச் செயலும் கில்ஜியைச் சினத்தின் உச்சத்துக்கே கொண்டு நிறுத்தியது. ஆத்திரம் என்ன செய்யும்? அறிவை அழிக்கும். ஆத்திரத்தோடு, காமவெறியும் சேர்ந்து கொண்டால் ஒரு மனதில் கேவலப் பிறவியின் நியாயங்களுக்கு எப்படி இடமிருக்கும். அதனால்தான் எட்டு தாயான – 30 வயதைத் தாண்டிய இன்னொருவன் மனைவியான ராணி பத்மினி மீது மோகம் குவிந்தது. வெறி எழுந்து சுட்டெரித்தது. அது கிடைக்கும் என்ற ஆசையினைத் தூண்டி ஏமாற்றியதால், கில்ஜி மேலும் வெறியானான். அடுத்து என்ன?

முஸ்லிம் முரட்டுப் படை, ராஜா ரத்தன்சிங் நாடு நோக்கிப் புயலெனப் புறப்பட்டது. கற்பை உயிரினும் மேலாக நேசிக்கிற ரஜபுத்திரப் பெண் அதுவும் ராணி பத்மினியின் கற்பைச் சூறையாட கில்ஜி முயன்ற காரியங்களால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த ரஜபுத்திரப் படை ஆவேசமாகப் போரிட்டது. ஆனாலும், பல்லாயிரக்கணக்கான கில்ஜியின் சேனையை ஜெயிக்க முடியவில்லை. மன்னன் ரத்தன்சிங் உள்பட, முப்பதாயிரத்துக்கும் மேலான ரஜபுத்திர வீரர்கள் யுத்தகளத்தில் வீரப்போர் புரிந்து மாண்டு, வீர சொர்க்கம் அடைந்தனர்.

போர் முனையில் கண்ட வெற்றி வெறியோடு, உடல் வெறி தீர்க்கும் வேட்கை பொங்க அரண்மனைக்குள் புகுந்தான் கில்ஜி. ஆனால் அவன் அங்கே கண்ட காட்சி திகைக்க வைத்தது. கைக்கு எட்டி விட்டது; வாய்க்கு எட்டப் போகிறது என்ற கற்பனையோடு சென்ற கில்ஜி, அங்கே எந்த ரஜபுத்திர மாதரசிகளையும் காணவில்லை. சாம்பல் மேட்டைத்தான் கண்டான்!

ஆம், ரஜபுத்திர சைன்யம் தோற்றுப் போய்விட்டது என்ற செய்தி கேட்டதுமே ராணி பத்மினியும் அவளோடு பத்தாயிரம் ரஜபுத்திரப் பெண்களும் தங்கள் குல வழக்கப்படி தீ வளர்த்து, அதில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு விட்டனர். வாள் முனையில் வென்றவன், ஹிந்துப் பெண்களின் கற்புத்தீ முன் தோற்றுத் திரும்பினான்!

ரஜபுதனத்து ராஸோக்கள் என்னும் பாரம்பரிய கிராமியப் பாடல்களில் பத்மினியின் கற்பு, வீரம் காவியமாக மிளிர்ந்து இன்றும் கிராம மக்களால் பாடப்படுகின்றன.

‘ப்ருத்விராஜ் ராஸோ’ எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலம் பத்மினி ராஸோவும்! ஆனால் இதை எல்லாம் வெறும் கட்டுக் கதைகள் என்று, கம்யூனிஸ சித்தாந்தத்திற்குத் தங்களது மூளையைஅடகு வைத்துவிட்ட சில வரலாற்று ஆசிரியர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். ஆனால் 1540ல் மாலிக் முகமது ஜய்ஸி என்பவர் எழுதிய ‘பத்மாவதி’ எனும் நூல் – இக்கிராமியக் காவியத்தை ஆதாரமாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளது.