2030-ம் ஆண்டுக்குள் 100 சதவீத மின்வாகன சேவை பயன்பாடு – அமைச்சர் ஹர்ஷவர்தன்

சென்னை, தரமணியில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழும (சிஎஸ்ஐஆர்) வளாகத்தில், காரைக்குடியில் உள்ள மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிக்ரி) சார்பில், ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்புத் தீர்வுக்கான புதுமைத் தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

மத்திய அறிவியல் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய சிக்ரி இயக்குநர் முனைவர் கலைச் செல்வி, `‘புவியின் சராசரி வெப்பம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. இச்சூழலில் மரபுசாரா மின்உற்பத்தி, பசுங்குடில் வாயு உமிழ்வை குறைத்தல், குளோரோஃபுளோரோ கார்பன் பயன்பாடுகளில் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. வாகனங்களை மின்மயமாக்குதல் மற்றும் கார்பன்டை ஆக்சைடு பிடிப்பு ஆகிய தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த மையத்தின் மூலம், லித்தியம் அயன் பேட்டரியின் மேம்படுத்தப்பட்ட இந்தியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்வாகனங்களுக்குப் பொருத்தமான லித்தியம் அயன் பேட்டரிக்கான தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை பேட்டரிகளான சோடியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் சல்பர் பேட்டரி ஆகிய தொழில்நுட்பங்கள் இம்மையத்தில் உருவாக்கப்படும்” என்றார்.

மாசில்லா சுற்றுச்சூழல்

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “இன்றைய தினம் சிஎஸ்ஐஆர்நிறுவனத்துக்கு மட்டுமின்றி, எதிர்கால விஞ்ஞானிகளுக்கும், மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் ஒரு முக்கிய நாளாகத் திகழ்கிறது. சிஎஸ்ஐஆர் நிறுவனம் இந்த நாட்டுக்காக பல்வேறு சாதனை புரிந்துள்ளது. குறிப்பாக, இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மகத்தான பணியை செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை குறைந்த விலைக்கு தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றன. அத்துடன், சாதாரண மக்களுக்குத் தேவைப்படும் வகையில், இந்நிறுவனம் உருவாக்கும் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.

சர்வதேச அளவில் 15-வது இடம்

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் பட்டியலில் இந்நிறுவனம் 15-வது இடத்தில் உள்ளது. 2030-ம்ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்வாகனங்களின் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

விழாவில், சிஎஸ்ஐஆர் குழும ஆய்வகங்களின் இயக்குநர்கள் பி.கே.சிங், சந்திரசேகர், ராம், சிக்ரி முன்னாள் இயக்குநர் கே.ஐ.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.