சீறியது வள்ளுவரும் பாரதியும் காரணம் என்ன?

இலக்கியவாதிகள் கடந்த காலத்தில் மட்டுமே முடங்கிவிடக்கூடாது. நிகழ் காலத்துடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தையும் அவர்கள் தீர்க்கதரிசனத்தால் அவதானித்து சமூகத்துக்கு தேவையான கருத்துகளை காலப் பெட்டகத்தில் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் பொதிந்து அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.

இத்தகைய எண்ணவளமும் சொல்திரளும் உளவியல் செழுமையும் கொண்ட கவிதைகள் சாகா வரம் பெற்றுவிடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் சில கவிதை வரிகள், எழுதப்பட்ட காலத்தைவிட அதற்கு பிந்தைய காலத்தில் அர்த்தச் செறிவை கிரகித்துக்கொள்கின்றன.

அரசியலிலும் பொருளியலிலும் குவிப்பு என்பது விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்து கிறது. அதிகாரக் குவிப்பு என்றாலும் திரவியக் குவிப்பு என்றாலும் உச்சியில் உள்ளவர்கள் உவகையில் திளைப்பதும் அடித்தளத்தில் உள்ளவர்கள் அளப்பரிய அல்லல் படுவதும் தொடர் நிகழ்வுகளாகிக்கொண்டிருக்கின்றன.

பொருள் உடைமையை சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று செல்வந்தர்கள் கருதினால் அதனால் அவர்களுக்கே எதிர்காலத்தில் இன்னல் ஏற்படும். செல்வப் பரவல்தான் நுகர்வுத் தேவையை செம்மைப்படுத்துகிறது. செல்வக் குவிப்பு நுகர்வுத் தேவையை தேயவைத்து விடுகிறது. எனவே அறநெறி வளர்பிறையாக வேண்டுமானால் துய்ப்பை பரவலாக்க வேண்டியது இன்றியமையாதது.  இக்கருத்தை பிரதிபலிக்கும் கவிதைகள் இப்போதும் உயிர்த்துடிப்புடன் திகழ்கின்றன.

வான்புகழ் கொண்ட வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என எல்லாத் துறைகளையும் பாடியுள்ளார். சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உக்கிரமாக இருந்தால் அமைதி அருகிவிடும் என்ற கோட்பாடு பொது உடமை சிந்தனையாளர்களின் பங்களிப்பு என்பது முற்றிலும் தவறு.

திருவள்ளுவர் இரவச்சம் என்ற அதிகாரத்தில்

‘‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்’’

என்று அறச்சீற்றத்துடன் அனலைக் கக்கியுள்ளார்.

பிறரிடம் யாசகம் கேட்டு அதை உண்டு வாழக்கூடிய அவலநிலையில் யாரும் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட அவல நிலை உருவானால், உலகியற்றியான் பரந்து கெடுக என்று வள்ளுவர் சபித்துள்ளார். அவரது வாய் இத்தகைய மங்கலமற்ற சொல்லை வேறு எந்த இடத்திலும் உமிழ்ந்தது இல்லை.

மகாகவி பாரதியார் கவிதையின் உச்சத்தைத் தொட்டபோதிலும் வறுமையிலேயே உழன்று கொண்டிருந்தார். சமுதாயத்தில் இரவலர்கள் என்ற பெயரில் யாரும் நடமாடாத உன்னத நிலை உருவாகவேண்டும் என்று அவர் கனவு கண்டார். இந்த நற்கனவு நனவாக வேண்டும் என்ற துடிப்பு அவரது கவிதைகளில் தெறித்தது.

உலகியற்றியானை திருவள்ளுவர் சபித்தார் எனில் உலகையே ஒழிப்போம் என மகாகவி பாரதியார் சூளுரைத்தார்.

தனியொருவனுக்கு உணவு இல்லையெனில்

ஜெகத்தினை அழித்திடுவோம்

என்ற பாரதியாரின் கோபக்குமுறல் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அனல் பிழம்பாக சுழன்றடித்தால் யாசகம் பெற்று வாழும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது முற்றிலும் சாத்தியமே.