விகாரி ஆண்டு கார்த்திகையில் நமது விருப்பம் முண்டாசும் அல்ல, மீசையும் அல்ல… மனசு!

கடையத்தில் 1918 ஆம் வருஷம் கார்த்திகை பிறந்தும் அடை மழை நிற்கவில்லை. அமாவாசைக்கு முந்தின தினம் இரவு பன்னிரண்டு மணி இருக்கும். ஒரு வீட்டில் 25 வயது வாலிபன் மூன்று நாட்களாக வாந்தி பேதியினால்  அவஸ்தைப்பட்டு, எழுந்திருக்க சக்தியற்று, இப்பொழுதோ இன்னும் சிறிது நேரத்திலோ உயிர் பிரியும் நிலையில், படுக்கையின்றி ஒரு கிழிந்த வேட்டியை விரித்து ஒரு மணைக்கட்டையை தலைக்கு வைத்து புரண்டு கொண்டிருக்கிறான். அவனுடைய இளம் மனைவி கவலையோடு புருஷனுக்கு வேண்டிய சிசுருஷைகளை (பணிவிடை) செய்து வருகிறாள். பத்து மாதக் குழந்தை ஒன்று தொட்டிலில் கிடக்கிறது. மூலையில் குத்து விளக்கு  ’மினுக் மினுக்’ என்று எரிகிறது. அந்த வாலிபன் அடிக்கொரு விசை (தரம்) வாந்தியெடுப்பதும், மனைவியையும் குழந்தையையும் அன்போடு பார்ப்பதுமாக இருந்தான். வீட்டில் பெரியவர்கள் கவலையோடு ஒரு மூலையில் உட்கார்ந்து, மெல்லிய குரலில் பேசிக் கொண்டும் கொட்டாவி விட்டுக் கொண்டும் இருந்தனர். பாரதியாருக்கு அந்த சமாச்சாரம் எட்டிற்று.  அவர் தெருக்கோடியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். உடனே வந்து பார்த்தார். நோயாளியின் நிலைமை பரிதவிக்கத் தக்க வண்ணம் இருந்ததை பார்த்து அவருக்கு வருத்தமும்   சினமும் கரைமீறி எழுந்தன. “என்ன மருந்து கொடுத்தீர்கள்?” என்று வீட்டாரிடம் கேட்டார்.  “கஷாயம் போட்டுக் கொடுத்தோம், வைத்தியன் சொன்னபடி” என்றார்கள்.  “மேற்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?”  “செய்வதென்ன? அவன் விதி அவ்வளவுதான்.” இதைக் கேட்டதும் பாரதியாருக்குக் கோபம்  மிஞ்சி விட்டது. வாசலில் வந்து நின்று “கிராமத்தோர்களே! வாருங்கள்” என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். தெருத் திண்ணைகளில் உறங்கிக் கொண்டிருந்த சிலர் வந்தனர். என்ன பயன் அந்த இளைஞனின் விதி அவ்வளவுதான்.

 (பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி  எழுதியபாரதி சரித்திரம்‘  நூலிலிருந்து) 

அதுதான் பாரதியின் மனசு. கண் முன்னால் கடையத்தில் அவர் பார்த்த பரிதாபக் காட்சி மட்டும்தான் என்றில்லை. எந்தச் சூழலிலும் நலிந்தோர் நலம் தான் அவர் நினைவில்! புயலடித்து தென்னை மரங்கள் நாடெங்கும் நாற்று போல் விழுந்தபோது ஒரு சிறிய திட்டையில் மட்டும் சிறு தென்னந்தோப்பு புயலுக்கு தப்பி  நின்றது. “ வறியவன் உடமை, அதனை வாயு பொடிக்கவில்லை” என்று பதிவு செய்கிறார் அந்தப் பக்கமாக தனிமை நாடி வந்த பாரதி.  ஏழையின் அந்தத் தோப்பு தப்பியதி்ல் அவருக்கு அவ்வளவு ஆனந்தம்!

பாரத புத்திரர்கள் பஞ்சப் பராரிகள் ஆகிவிட்டது  கூட பாரதியார் மனசை அவ்வளவாக நோகடிக்கவில்லை, “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்” … “இவர் துயர்களைத் தீர்க்க்வோர் வழியிலையே?” என்று குமுறினார். மக்களை வறுமையும் அறியாமையும் வாட்டுவதைத்தான்  அவரால்  தாங்க முடியவில்லை. அதே கடையத்தில் ஊர்ப் பிள்ளைகள் வேப்பம் பழத்தை எடுத்தெடுத்து விழுங்குவதைப் பார்த்த  பாரதி,  சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் தான் அவர்களுக்கு வேப்பம்பழம் உணவானது என்று தெரிந்ததும் “தாயே, பராசக்தி” என்று கதறி விட்டார்.

வாடிக்கையான பாட்டாளிகளின் கூட்டாளிகள் போகிற பாதையில் போகாமல், பாரத மண்ணில் சாமானியர்களாக உழல்கிறவர்ளின் நல்லதனம் கொண்டாடப்பட வேண்டியது என்று பாரதியார் மனதில் உறுதியாக பட்டது. பார்வையிலே சேவகனாய் வாழ்கிறவர்கள் பண்பிலே தெய்வமாக விளங்குவதை அவர் கவிதையிலே பதிவு செய்யத் தவறவில்லை. ‘கண்ணன் என் அடிமை’ என்ற பாடலில்  பண்ணையாளை  இப்படிப் பேசவைக்கிறார் பாரதி: “அண்டை அயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டுமையே!” என்று தெரிவித்து ‘‘மானத்தைக் காத்திட நாலுமுழத் துண்டு தரவும் கடனாண்டே” என்று தனக்கு வேண்டியதை விண்ணப்பித்த கையோடு “தானத்திற்கு சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடனாண்டே!” என்கிறார் பாரதியின் சாமானியர். எந்த நிலையிலும் தன்னை விட தேவை அதிகம் உள்ளவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நம்ம  விவசாயத் தொழிலாளிக்கு இருப்பதை சித்தரிக்கிறது பாரதியின் மனசு.

பாஞ்சாலி சபத காவியம்.  துரியோதனனின் அரண்மனையில் திரௌபதி துகிலுரியப்பட்ட  காட்சி.  கண்ணனின் வஸ்திர தானம் பாஞ்சாலியின் மானம் காக்கிறது. பீஷ்மர் எழுந்து நின்று கரங் குவிப்பதாக வர்ணித்துக் கொண்டே போன  பாரதி, எங்கோ தெருக்கோடியில் சாவடி மறவர்கள் (வீரர்கள்) “ஓம் சக்திசக்தி சக்தியென்று கரங்குவித்ததை” மறக்காமல் வர்ணனையில் சேர்த்துக் கொள்கிறார். ஊரில் மேல்தட்டு கேடுகெட்டுப் போனாலும் கீழ்த்தட்டு பண்பு கெடாமல் வாழ்வதை களிப்போடு பதிவு செய்கிறது பாரதியின் மனசு.  நமது  சாமானிய மக்களின் பண்புதான் எந்த கலாச்சார சீர்கேட்டையும் ஒரு கை பார்க்கும் கவசம் என்று சுட்டிக்காட்டி விட்டுப் போயிருக்கிறாரோ பாரதியார்?