சித்தர்களை ஒரு சினிமாக்காரன் சிறுமைப்படுத்துவதா?

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை” என்பது பழமொழி. சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி என அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு மூலிகையிலும் ஒரு மருத்துவ குணம் உள்ளது என்பதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சித்தர்கள் அனுபவ வாயிலாக தெரிவித்துள்ளார்கள். மித மிஞ்சிய ஆங்கில மோகத்தால் நமது பழமையான, பாரம்பரிய மருத்துவத்தின் அருமை பெருமைகளை நாம் உணரத் தவறிவிட்டோம்.

சமீபத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் பலர் காலமாகி உள்ளனர் என்பது வருத்தமான செய்தி. டெங்கு வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து மீளவும் நிலவேம்பு சூரணம் சிறந்த மருந்தாகக் கருதப்பட்டது. நிலவேம்பு சூரணத்தில் மிளகு, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, சந்தனம் என 9 மூலிகைகள் கலந்துள்ளன. அரசும், சமூக நிறுவனங்களும் மக்களுக்கு நிலவேம்பு சூரணத்தை ஆங்காங்கு வழங்கி வருகிறார்கள். இதனால் நல்ல பயன் கிடைத்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கமலஹாசன் நிலவேம்பு கஷாயம் விநியோகிக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார். இது பொதுமக்களை குழப்பமடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சில முட்டாள்கள் நிலவேம்பு கஷாயம் குடித்தால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று சமூக வலைத் தளங்களில் வதந்தி கிளப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் கமலஹாசன் அறிக்கைதான் காரணம்.

‘நான் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறேன், அடுத்து நானே தமிழக முதல்வராகி விடுவேன்’ என்ற கனவில் மிதக்கும் கமலஹாசனின் துவக்கமே குழப்பமாக உள்ளது. எல்லா விஷயங்கள் பற்றியும் கருத்துக் கூற இவர் என்ன சகலகலா மேதாவியா?

கமலஹாசன் அறிக்கைக்குப் பின்னால் ஒரு பெரிய சதித் திட்டமே உள்ளது. பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் சதி வலையில் கமலஹாசன் சிக்கிக் கொண்டார் என்றே தோன்றுகிறது.

ஹிந்துக்களைப் பொறுத்த மட்டில், கமலஹாசனின் விவரங்கெட்ட அறிக்கை, மகா தபஸ்விகளான சித்தர்களையும் அவர்கள் மக்கள் மீது கொண்ட கருணையால் வழங்கிச் சென்றுள்ள சித்த மருந்துகளின் சக்தியையும் மட்டந்தட்டும் செயல். அலோபதி மருந்துகளை நமது தொண்டையில் திணித்துப் பணம் பறிக்கும் பன்னாட்டுப் பெருவர்த்தக முதலைகள்தான் கமலஹாசனின் வழிபடு தெய்வம் போலிருக்கிறது.