குஷக் பகுலா: புத்தரை தந்த பாரதத்திற்கு புகழ் சேர்த்த புனிதர்

பாரத நாட்டின் ஒரு மாநிலமான ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக விளங்குவது விஸ்தாரமான லத்தாக். கொந்தளிப்பான அந்த மாநிலத்தில் லத்தாக் பகுதி இன்றுவரை பௌத்த தர்மத்தை கண்ணே போல் போற்றி வருகிறதென்றால் காரணம், குஷக் பகுலா ரிம்போசே (1917 மே 21 – 2003 நவம்பர் 4).  இவர் வாழ்நாளெல்லாம் ஆற்றிய அரும்பணி,   எந்தெந்த நாடுகளில் எல்லாம் பௌத்தம் அந்த நாடுகளின் அரசியல் கெடுபிடி காரணமாக  பாதிப்புக்கு உள்ளானதோ அங்கெல்லாம் பௌத்தத்தை நிலைநாட்டுவதாகவே அமைந்தது. அத்தகைய நெடுநோக்குக்கு சொந்தக்காரரை பாரத அரசு 1986ல் பத்ம பூஷண் விருது அளித்து போற்றியது.

1959ல்  சீன கம்யூனிஸ்ட் அரசு தலாய் லாமாவையும் ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்தர்களையும் கொடுமைப்படுத்தியபோது குஷக் பகுலா அவர்களுக்காக தார்மீகக் குரல் கொடுத்தார். இவர் லத்தாக்கில் பிறந்திருந்தாலும் பௌத்தத்தில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமை காரணமாக திபெத்திய மக்கள் இவரை பெருமதிப்புடன் போற்றுகிறார்கள். அதுபோலவே பத்தாண்டு காலம் அவர் மங்கோலிய நாட்டின் இந்திய தூதராக அங்கே பௌத்தத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் தோள் கொடுத்து மங்கோலியர்களின் மரியாதையையும் சம்பாதித்தார். பாரதத்தை மேற்கிலும் கிழக்கிலும் இருந்து எதிரிகள் தொல்லைப்படுத்தும் அதே நேரத்தில் பாரதத்தின் வடக்கே இமயமலை கடந்து மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் பாரத பக்தர்களை பௌத்தத்தின் வாயிலாக உருவாக்கிய நெடுநோக்கான சாதனைக்கு சொந்தக்காரர் குஷக் பகுலா. இவ்வளவு பெருமைக்கும் உரிய குஷக் பகுலா  லோக் சபா தேர்தல் வேட்பாளராக களமிறங்கியபோது இவரை எதிர்த்து எவரும் நிற்க முன்வரவில்லை. இவ்வாறு போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது 1968ல்.