சிஏஏ யாருக்கும் எதிரானது அல்ல – மத்திய அமைச்சர்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) யாருக்கும் எதிரானது அல்ல என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்தார்.

புதுச்சேரி பூமியான்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.

 பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று எந்த மாநிலமும், யூனியன் பிரதேச அரசுகளும் மறுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசியல் அமைப்புக்கு விரோதமானது. சிஏஏ குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. இந்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.

அனைத்து நாடுகளிலும் மக்கள்தொகை பதிவேடு உள்ளது. மக்கள்தொகை பதிவேடு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக நிலுவையில் உள்ள அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும் என்றார் அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்.

 தொடர்ந்து, உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட நமோ செல்லிடப்பேசி சார்ஜரை அவர் அறிமுகப்படுத்தினார். கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச் செயலர் ஆர்.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.