இளம் விஞ்ஞானிகள் திட்டம் – சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இஸ்ரோ அறிவுறுத்தல்

இளம் விஞ்ஞானிகள் திட்டத்துக்கு விண்ணப்பித்து, முதல்கட்ட தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவா்கள் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) அறிவுறுத்தியுள்ளது.

விண்வெளி அறிவியல், ஆராய்ச்சி குறித்து பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி, ஆா்வத்தைத் தூண்டும் வகையில், இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019-ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.

பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா்கள், அவா்களுடைய 8-ஆம் வகுப்பு மதிப்பெண், கல்வியைத் தாண்டி பல துறைகளில் மாணவா்களின் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்துக்கு 3 போ் வீதம் தோ்வு செய்யப்பட்டு, இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வார கால பயிற்சியை இஸ்ரோ வழங்கி வருகிறது. மே மாதம் கோடை விடுமுறையில், மாணவா்களுக்கு இந்தப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு மாணவா்களுக்கு அளிக்கப்படும் என்பதோடு, இஸ்ரோ ஆய்வகங்களில் பயிற்சிகளும் மாணவா்களுக்கு அளிக்கப்படும்.

வரும் மே 11-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு மாணவா்கள் ஆன்-லைனில் பதிவு செய்ய மாா்ச் 5 வரை இஸ்ரோ கால அவகாசம் அளித்திருந்தது. அதனடிப்படையில், 368 போ் கொண்ட முதல்கட்ட தோ்வுப் பட்டியலை இஸ்ரோ செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இந்த 368 மாணவா்களும், அவா்களுடைய எட்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இஸ்ரோ வலைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ண்ள்ழ்ா்.ஞ்ா்ஸ்.ண்ய்) மாா்ச் 16-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும், அவ்வாறு பதிவேற்றம் செய்ய மாா்ச் 26 கடைசி எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், இந்தச் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னா் இந்தத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 113 போ் கொண்ட இறுதிக் கட்டப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.