சபாஷ் சுரேந்திரா! சபாஷ் சங்கர்!

அன்புடையீர், வணக்கம்.

ராஜஸ்தான் ஹனுமன்கர் மாவட்டத்தில் சுரேந்திரா, சங்கர் வர்மா என்ற இரு சகோதரர்கள் வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர்களை வாங்கி அதை விற்பனை செய்து வந்தனர். ஒருநாள் தங்கள் குடோனில் பழைய பேப்பர்களை தரம் வாரியாகப் பிரித்து கட்டுக் கட்டினர். அப்போது ஒரு பேப்பர் கட்டுக்குள்ளிருந்து ஒரு கவர் விழுந்தது. திறந்து பார்த்தால் அதில் ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தது.  ஏதோ ஒரு வீட்டில் பழைய பேப்பர் வாங்கும்போது அவர்களின் பணம் தவறுதலாக இதில் மாட்டிக்கொண்டது. ஆஹா.. இறைவனாகப் பார்த்து நமக்கு இந்தப் பணத்தை அனுப்பியுள்ளார் என்று இருவரும் மகிழ்ச்சியடையவில்லை. அதற்கு பதிலாக, ஐயோ பாவம்… யார் வீட்டுப் பணமோ? எதற்காக வைத்திருந்தார்களோ.. தொலைத்துவிட்டு எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்களோ என நினைத்து அதை சரிபார்க்கையில், அந்த பணத்தோடு பள்ளி நோட்டின் ஒரு பேப்பர் இருந்தது. அதில் ஷாலு என்ற பெயர் இருந்தது.

அவ்வளவுதான். இருவரும் தாங்கள் பேப்பர் வாங்கிய வீடுகளில் ஷாலு என்ற குழந்தை உள்ளதா என்று தேடினர். கடைசியில் அந்த வீட்டைக் கண்டுபிடித்தனர். விசாரித்தபோது அவர்கள் தொலைத்த பணம் தான் என்று உறுதி செய்து அந்தப் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர். நண்பர் ஒருவருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்பி வந்த நிலையில், அதனை ஒரு பழைய பேப்பரில் சுருட்டி வைத்துள்ளார்கள். இது தெரியாத அவரது மனைவி பழைய பேப்பருடன் சேர்த்துப் போட்டுள்ளார். இந்தக் காலத்திலும் இத்தகைய மனிதர்களா என்று ஊரே வியந்து சகோதரர்களைப் பாராட்டியது. ஏராளமான நல்லவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கங்கை இன்னும் வற்றிவிடவில்லை. (சென்னை தினமலர், 31.7.2016)