கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா?

வாழ்க்கை என்பதே நிச்சயமற்று இருக்கும்போது நாம் எதற்காக  இலக்குகளை  நிர்ணையிக்க  வேண்டும்?

– வி. கேசவன் நாயர், திருச்சூர்

வாழுகின்ற காலத்தில் ஏதாவது சாதனை படைக்க இலக்குகள் தேவைதானே! சுவாமி விவேகானந்தரும் பாரதியாரும் வாழ்ந்தது 39 ஆண்டுகளே. ஆதிசங்கரர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே. அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு இலக்கோடு தானே வாழ்ந்தார்கள்?

* மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா?

– ராமலட்சுமி ஸ்ரீதரன், காரைக்குடி

கடன் என்று வாங்கினாலே திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் நியதி. படித்து வேலை கிடைத்தவுடன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது அவர்களது கடமை. வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கிறவரை கால அவகாசம் கொடுக்கலாம்.

தியானம் – தூக்கம்  இரண்டுக்கும்  உள்ள  வித்தியாசம்  என்ன?

– கே. சுதாகரன், கோவை

தூக்கம் என்பது உடலின் ஐம்பொறிகளின் தற்காலிக ஓய்வு. தியானம் என்பது எண்ணங்களின் ஓய்வு. ஆனால் சிலர் தியானம் செய்கிறேன் என்று துவங்கி ஒரு குட்டித் தூக்கம் போட்டு விடுகின்றனர்.

* ஒரு  நிறுவனத்தில் பணியாற்றும்போது எந்த மனநிலை இருக்க வேண்டும்?

– தமிழ்ச்செல்வி, அறந்தாங்கி

அந்த நிறுவன வளர்ச்சியில் உங்களது பங்கு முக்கியமானது என்ற நிலை அமையவேண்டும். நேர்மையுடனும் கடின உழைப்புடனும் பணியாற்ற வேண்டும். யாரைப் பற்றியும் புறம் பேசாமல் இருக்க வேண்டும். அப்படியென்றால் உங்களுக்கு உயர்வு  நிச்சயமே.

ஜாதிகளை  ஒழிப்பதில்  கழகங்களின்  பங்கு?

– ப. விருத்தகிரீசன், லால்குடி

1967 முதல் இன்றுவரை திமுக – அதிமுக என மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகிறார்கள். இவர்களால் ஜாதியை ஒழிக்க முடிந்ததா? ஜாதியை ஒழிப்போம் என்பதே ஏமாற்று. ஜாதி இருக்கலாம் தவறில்லை. ஜாதித் துவேஷம் தான் கூடாது.

அதிமுகவிலிருந்து  சசிகலா  புஷ்பா  நீக்கம்  பற்றி?

– கோ. சகாதேவன், புதுக்கோட்டை

குப்பையைக் கிளறினால் நாற்றம்தான் வரும். தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் ஒருமாதம் பொழுது போகும்.

அமெரிக்க  அதிபர்  தேர்தல்  பற்றி?

– குடந்தை பாலன், திருச்சி

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன். இவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப், ‘நான் வெற்றி பெற்றால் எந்த முஸ்லிம் நாடுகளிலிருந்து யாரையும் குடியேற அனுமதிக்க மாட்டேன்’ என முழங்குகிறார்.  நம் நாடாக இருந்தால் இவர் ஒரு வகுப்புவாதி. வெற்றி என்பது மதில் மேல் பூனை.

* குறியிட்ட கேள்விகளுக்கு  புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.