கோஷ்டி கானம்

அண்ணா பல்கலைக் கழக தரம் உயர்த்தப்பட்டால் தமிழக மாணவர்களின் படிப்பு, பல்கலைக் கழக எதிர்காலம், இட ஒதுக்கீடு என அனைத்தும் பாழாகிவிடும். கல்விக்கட்டணம் உயரும். அரசை மீறி செயல்படுகிறார். முறைகேடு. இதெல்லாம் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிராக கூறும் குற்றசாட்டுகள். ஒரே குரலில் ஏன் இந்த ஒப்பாரி?

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் தங்களால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்பதால் நீட்டை எதிர்த்தனர். தங்கள் பள்ளியில் ஹிந்தி கற்பிக்கும் இவர்கள் அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்க எதிர்க்கின்றனர்.

தங்கள் பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் இந்த கூட்டம்தான் கேந்திரிய வித்யாலயாவில் பகுதி நேர தமிழ் ஆசிரியர் நியமனங்களை குறை கூறுபவர்கள். நவோதயா பள்ளிகள் வந்தால் தங்கள் கல்வி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை தமிழகத்தில் நுழையவிடாமல் வைத்திருப்பவர்களும் இவர்களே. இப்படி கல்வியை வியாபாரமாகவே பார்த்து பழகிய இவர்கள், அது கைமீறி போனால் சும்மா இருப்பார்களா? இதுதான் அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திலும் நடக்கிறது.

துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், பணி நிரந்தரம், அலுவலக செயல்பாடுகள், கல்லூரிகள் இணைப்பு என அனைத்திலும் பல வருடங்களாக பல்வேறு வழிகளில் ஆதாயம் அடைந்தவர்கள் இவர்கள். ஆளுனர், துணைவேந்தர் போன்றோரின் நேர்மையால் அந்த வாய்ப்புகள் பறிபோவதால்தான் இந்த கூப்பாடு. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் அண்ணா பல்கலைக் கழக எதிர்ப்பு வரை அனைத்தும் இவர்களுக்கு சுயநலமேயன்றி வேறில்லை.