பஞ்சாப் சிங்கம்

சமூக சீர்திருத்தத்திற்கும், தேச விடுதலைக்கும் தம்மை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்களில் லாலா லஜபதி ராயும் ஒருவர். லால்––பால்–-பால் என அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களில் லால் என்பது லாலா லஜபதி ராயை குறிக்கும்.

சிறு வயதிலேயே ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். சுவாமி
தயானந்த சரஸ்வதி கருத்துகளால் ஈர்க்கப்பட்டு ஆர்ய சமாஜத்தில் உறுப்பினரானார்.

பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்படும் இவர், சாதி வேறுபாடு, தீண்டாமையை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். ஆர்ய சமாஜ், யங் இந்தியா, அன் ஹேப்பி இந்தியா போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

தன் தாயின் நினைவாக பெண்களுக்கான காசநோய் மருத்துவமனையை நிறுவினார். பஞ்சாப் தேசிய வங்கி, லட்சுமி காப்பீட்டு நிறுவனங்களை நிறுவியவரும் இவரே. அமெரிக்காவில் இருந்தபோது ‘இந்தியன் ஹோம் ரூல் லீக்’ அமைப்பை நிறுவினார்.

1928-ல் பாரதத்திற்கு வருகை தந்த சைமன் கமிஷனுக்கு எதிராக அறவழியில்
போராட்டம் நடத்தினார். இதை அடக்க ஜேம்ஸ் ஏ ஸ்காட் தலைமையிலான
காவலர்கள் கடுமையான தடியடி நடத்தினர். அப்போது ‘இன்று என் மீது விழும்
ஒவ்வொரு அடியும், ஆங்கிலேய அரசின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் ஆணிகள்’ என்று கூறினார் லஜ்பத்ராய். காவலர்களின் தாக்குதலால் படுகாயமடைந்த லாலா லஜ்பத்ராய் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

லாலா லஜ்பத்ராய் நினைவு தினம் இன்று