கோவையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுதல்

 

கோவையில் கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை; கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்’ என்றார்.
கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையில் உள்ள கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது

கோவை மக்கள் அனைவரும் என் மீது அன்பை பொழிகிறார்கள். கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுடன் தான் பா.ஜ., போட்டி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் 4 முறை பேசியுள்ளார், மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளார்

ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என மாநில அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்தது. தொழில்துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி., பேசியிருக்கிறாரா? கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை; கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்.
கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னை பக்குவப்படுத்தியது. இங்கள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் என்ஐஏ காவல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.