தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட கருவிகள்

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் முந்தைய ஆட்சியின் போது, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பிரபாகர் ராவ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி உரையாடல்கள் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கப்பட்டதையும், சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்ட்ர சமிதி தோல்வி அடைந்த மறுநாள், ‘டிஜிட்டல்’ தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டதையும், கைதான போலீஸ் அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில், ‘ஐ நியூஸ்’ என்ற தெலுங்கு செய்தி தொலைக்காட்சியை நடத்தி வரும் ஷ்ரவன் ராவ் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரி ராதா கிஷன் ராவ் ஆகியோரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒட்டுக் கேட்பு பணிக்கான உபகரணங்கள், இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மாநில உளவுத்துறையின் தொழில்நுட்ப ஆலோசகரான ரவி பால் என்பவர் உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளார்.
அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியின் வீட்டுக்கு அருகே அலுவலகம் அமைத்து, அந்த உபகரணங்களை அங்கு வைத்து அவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த உபகரணங்கள் வாயிலாக, 300 மீட்டர் துாரம் வரையிலான தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த ஒட்டுக் கேட்பு நடவடிக்கை எதிர்க்கட்சி தலைவர்களுடன் மட்டும் நிற்கவில்லை. முன்னணி தொழிலதிபர்கள், நகைக்கடை அதிபர்கள், சினிமா நட்சத்திரங்களின் உரையாடல்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால், பிரபலமான ஜோடி ஒன்று விவாகரத்து வரை சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபரும், பா.ஜ., பிரமுகருமான சரண் சவுத்ரி என்பவர், முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், மூத்த போலீஸ் அதிகாரிகள் ராதா கிஷன் ராவ் மற்றும் உமா மகேஷ்வர ராவ் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னை கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். பின் அவருக்கு சொந்தமான நிலத்தை, பாரத் ராஷ்ட்ர சமிதி அமைச்சர் எர்ரபெல்லி தயாகர் ராவின் உறவினர் விஜய் என்பவரது பெயருக்கு மிரட்டி பத்திர பதிவு செய்ய வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன், 50 லட்சம் ரூபாய் பணத்தை மிரட்டி பறித்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்ததாகவும், பொய் வழக்கு போடுவேன் என, போலீஸ் அதிகாரி உமா மகேஷ்வர ராவ் மிரட்டியதால் அந்த மனுவை வாபஸ் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் தயாகர் ராவ் மறுத்துள்ளார்.
தன்னை கட்சி மாற சிலர் நிர்ப்பந்திப்பதாகவும், அதற்கு மறுத்ததால் தனக்கு எதிராக அரசியல் சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது, முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவரை போலீசார் விரைவில் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.