கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு தடை

கேரளாவில் உள்ள ஹிந்து கோயில்களை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான திருவாங்கூர் தேவசம் போர்டு (டி.டி.பி,) அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட கேரள கோயில்களின் வளாகத்திற்குள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்) ஷாகாக்கள் மற்றும் செயல்பாடுகள் மீதான தடையை மீண்டும் உறுதிப்படுத்தும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. மே 18 தேதியிட்ட சுற்றறிக்கையில், ஹிந்து கோயில்களில் ஆ.ர்எஸ்.எஸ் நடவடிக்கைகளை தடை செய்து அது வெளியிட்டிருந்த முந்தைய உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது. தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோயில்களின் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள், பயிற்சிகள் மற்றும் உடற் பயிற்சிகளை அனுமதிக்கும் கோயில் நிர்வாகிகள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரளாவில் உள்ள கிட்டத்தட்ட 3,000 கோயில்களை நிர்வகிக்கும் ஐந்து தன்னாட்சி அமைப்புகளில் ஒன்றாகும். சபரிமலை கோயில் உட்பட 1,200 ககும் மேற்பட்ட கோயில்களை இது நிர்வகிக்கிறது. கொச்சி தேவசம் போர்டு, மலபார் தேவசம் போர்டு, குருவாயூர் தேவசம் போர்டு மற்றும் கூடல்மாணிக்யம் போர்டு ஆகியவை மற்ற நான்கு வாரியங்களாகும். இந்த போர்டுகளின் விவகாரங்களை நிர்வகிக்க மாநில அரசு தேவசம் அமைச்சத்தைக் கொண்டுள்ளது. இதனை தற்போதைய இடதுசாரி அரசின் அமைச்சரான கே. ராதாகிருஷ்ணன் நிர்வகிக்கிறார்.