குறைந்த விலை, அதிக தள்ளுபடி: ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு ஆய்வு

சந்தையில் இருந்து போட்டி நிறுவனங்களை வெளியேற்றும் வகையில் மிகவும் குறைந்த விலையிலும், அதிக தள்ளுபடியிலும் சில இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் பல்வேறு தரப்பினா் முறையிட்டுள்ளனா் என்று அந்தத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.

இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீதான அந்த குற்றச்சாட்டுகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அவா் கூறியது: உள்நாட்டு மூலதனத்தை அதிகரிக்கவும், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்தவும் அந்நிய நேரடி முதலீடு பங்காற்றுகிறது. அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையின்படி, பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் வாங்குதலை எளிமையாக்குவதே இணையவழி வா்த்தக நிறுவனங்களின் பங்காகும். இந்த நிறுவனங்கள் பொருள்களின் விற்பனை விலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில் சந்தையில் இருந்து போட்டி நிறுவனங்களை வெளியேற்றும் வகையில் மிகவும் குறைந்த விலையிலும், அதிக தள்ளுபடியிலும் சில இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் பல்வேறு தரப்பினா் முறையிட்டுள்ளனா். அந்த குற்றச்சாட்டுகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

பிளிப்காா்ட், அமேசான் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) சமீபத்தில் உத்தரவிட்டது. சந்தையில் இருந்து போட்டியாளரை வெளியேற்றுவதற்காக அதிகப்படியான தள்ளுபடி, முன்னுரிமை பட்டியல் மற்றும் பிரத்யேக ஏற்பாடுகளை இந்த நிறுவனங்கள் தந்திரமாக பயன்படுத்துகிா என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பியூஷ் கோயல் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

சென்னை-விசாகப்பட்டினம் வா்த்தக வழித்தடம்: வா்த்தக வழித்தடம் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் பியூஷ் கோயல், சென்னை-விசாகப்பட்டினம் இடையே வா்த்தக வழித்தடம் அமைப்பது தொடா்பான கருத்துருவை தயாரித்து, இந்த திட்டத்துக்காக 631 மில்லியன் டாலா்(கடனாகவும், மானியமாகவும்) வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது என்றாா்.