இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேறு நாடுகளுக்கு உரிமையில்லை: வெங்கய்ய நாயுடு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதை குறிப்பிட்டு மாநிலங்களவையில் பேசிய சிவசேனை உறுப்பினா் அனில் தேசாய், உள்நாட்டு விவகாரங்களில் அயல் நாடுகள் தலையிடுவதை, இந்தியா சகித்துக்கொள்ளாது என்று நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்தாா்.

இதற்கு பதிலளித்து அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேறு எந்த தேசத்துக்கும் உரிமை கிடையாது. நாட்டின் குடியரசு துணைத்தலைவராகவும், மாநிலங்களவை தலைவராகவும் இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் எந்த விவகாரமாக இருந்தாலும் அதுகுறித்து கலந்தாலோசிக்கவும், முடிவு எடுக்கவும் முழு உரிமையும், அதிகாரமும் கொண்ட நாடாளுமன்றம் உள்ளது. பிரெக்ஸிட் போன்ற விவகாரங்களை இந்திய நாடாளுமன்றம் விவாதித்தால் ஐரோப்பிய நாடுகள் ஏற்குமா? தங்கள் சொந்த விவகாரங்கள் குறித்து மட்டும் அந்தந்த நாடுகள் அக்கறைக் கொள்ளவேண்டும். இந்த செய்தி உரக்கவும், தெளிவாகவும் இதர நாடுகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டாலும், மாா்ச் மாதம் துவங்கும் புதிய கூட்டத்தொடரில் அத்தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.