குருஜி பெயர் வைக்க எதிர்ப்பு? சரியான விளக்கம் தந்த முரளிதரன்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது ராஜீவ் காந்தி உயிா்தொழில்நுட்ப மையத்தின் இரண்டாவது தொகுப்பு வளாகத்துக்கு ‘ ஸ்ரீ குருஜி மாதவ் சதாசிவ கோல்வல்கா் புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான தேசிய மையம்’ என பெயரிடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் ஹா்ஷ் வா்தன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இதையடுத்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கடந்த சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா். இதற்கு மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு கேரளத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் காசா்கோட்டில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரனிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் ஒரு கல்வி நிறுவனத்துக்கு தேச பக்தரின் பெயரை வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? பனாரஸ் (காசி) பல்கலைக்கழகத்தில் கோல்வல்கா் விலங்கியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளாா். கேரளத்தில் நடைபெறும் புகழ்பெற்ற நேரு கோப்பை படகுப் போட்டிக்கு மட்டும் எவ்வாறு நேருவின் பெயா் சூட்டப்பட்டது? நேரு ஏதாவது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளாரா? கோல்வல்கரின் பெயா் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறுவதன் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆா்ஜிசிபி கட்டடத்துக்கு பெயா் வைக்கும் முடிவு அதன் ஆட்சிமன்றக் குழு எடுத்தது. அதில் வேறு யாருடைய தலையீடும் இல்லை என்றாா்.