கொடி நாள்

நமது தாய்த் திரு நாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ல் படை வீரர் கொடி நாள் கொண்டாடப்படுகிறது. நிதி வசூலில் அரசும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்திரிய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது.

பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லைப்பிரச்னைகளின் போது மூண்ட போர்களில் தமது இன்னுயிர் நீத்த பல்லாயிரக் கணக்கான பாரத ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் பொருட்டும், போரில் உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாகி விட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் பொருளாதாரத் தேவைகளில் உதவும் பொருட்டும், பாரத அரசு ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் அன்று நன்கொடை திரட்டி ராணுவ வீரர்களுக்கு அளித்து நாட்டின் பாதுகாப்பில் அவர்களது பங்களிப்பைக் கெளரவிக்கிறது. ராணுவ வீரர்களை களத்துக்கு அனுப்பி விட்டுக் கனத்த இதயத்தோடு வீடுகளில் காத்திருக்கும் குடும்பத்தினருக்கு, ‘கவலைப்பட வேண்டாம், உங்களைக் காக்க, நாங்கள் இருக்கிறோம், நாடிருக்கிறது’ என நம்பிக்கையளித்திடும் நாள், இந்தக் கொடிநாள்.

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் தெய்வங்களாய் இருந்து காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமை. அந்த கடமையை நாம் செவ்வனே செய்வோம்.