குரங்கணி காட்டுத் தீ மகளிர் தின மரணங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலையோரம் தேனி மாவட்டம் குரங்கணி ஊரிலிருந்து கொழுக்கு மலைக்கு வார விடுமுறை நாட்களில் டிரெக்கிங் எனப்படும் இயற்கையை ரசித்தவண்ணம் செல்லும் மலை நடைப்பயணம் நடைபெறுவது வழக்கம். இதில் சென்னையிலிருந்தும்  மற்ற பகுதிகளிலிருந்தும் யுவன், யுவதிகள் வருவது வழக்கம். அப்படித்தான் ‘உலக மகளிர் தினம்’ டிரெக்கிங் என்னும் பெயரில் சென்னையிலுள்ள சென்னை டிரெக்கிங் கிளப் ஏற்பாடு செய்த மலை நடைப்பயணத்தில் 27 பேர், மற்றவர்கள் ஏற்பாடு செய்த குரூப்பில் 12 பேர் என 39 பேர் மார்ச் 9 அன்று பயணமானார்கள்.

மார்ச் 10 அன்று கீழே இறங்கும்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் கருகி 8 பெண்களும் 3 ஆண்களும் (மருத்துவமனையில் மேலும் மூவர்) உயிரிழந்தனர். யார் மீது குற்றம், யார் காரணம் என்ற பட்டிமன்றங்கள்  முடிந்தபாடில்லை. ஆனால் 16 பேரை பலிகொடுத்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. முதலில் சென்னை டிரெக்கிங் கிளப். இதன் தலைவர் பீட்டர் வான்கீட் என்னும் வெளிநாட்டவர். இவர் தலைமறைவாகி விட்டார். கிளப் 10 வருடமாக  இம்மாதிரி டிரெக்கிங் லாபநோக்கின்றி செய்து வருவதாக அதன் இணையதளம் குறிப்பிடுகிறது. இதில் சென்று வந்தவர்களும் கிளப் மீது எந்தக் குற்றச்சாட்டும் வைக்கவில்லை.

16 பேர் பலியானவுடன் காட்டிற்குள் செல்ல அனுமதி அளித்த வனத்துறையை தான் அனைவரும் குறை கூறுகின்றனர். அனுமதியின்றி உள்ளே சென்றதாக முதலமைச்சரும் பேட்டி. பின் எங்கே குற்றம், யார் மீது குற்றம்? மதுரை சரக வன அலுவலர் ஆர்.கே. ஜிகானியா பத்திரிகைக்கு அளித்த பேட்டி மிகவும் ருசிகரமாக உள்ளது. வனத்தை பற்றி தெரிந்து கொள்ள இம்மாதிரி ஈக்கோ டூரிசம் என்ற பெயரில் கிராம சுற்றுச்சூழல் முன்னேற்ற கமிட்டி என்பதன் துணையோடு, டிரெக்கிங் செல்வதற்கு குழுக்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள். இப்படி முறையாக வனத்துறை அனுமதி பெற்ற குழுக்களை, காடுகளில் சரியாக வழிகாட்டி பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்கள். இப்படிச் செய்யாமல் பல குழுக்கள் தாங்களாகவே டிரெக்கிங் செய்கிறார்கள். இவர்கள் காட்டுத் தீயில் மட்டுமின்றி காட்டு விலங்குகளிடமும் சிக்கலாம்.

இதுதவிர, வனங்களில் செல்ல ‘கூப்’ எனப்படும் வெட்டிய மரங்களைக் கொண்டு செல்லும் உள்ளது. இது காட்டிலாகாவினருக்கு மட்டுமே பரிச்சயமானது. இதில் கைடு இல்லாமல் செல்வது ஆபத்தானது. இம்மாதிரி ஒருவழியில் தான் இறந்தவர்கள் சிக்கிக் கொண்டார்கள்.

காட்டிலாகாவில் காட்டுத்தீயை கண்காணிக்கும் ஊழியர்கள் தனியாக இருக்கிறார்கள். இவர்கள் இது பரவாமல் தடுக்கவேண்டும். ஊழியர் எண்ணிக்கை குறைபாட்டால் தற்போது இது செயல்படவில்லை. டிரெக்கிங் போக விரும்புவதன் காரணம் என்ன? இது வீரவிளையாட்டா, இயற்கை ஆர்வமா, உடற்பயிற்சியா? இதன் மீது ஆர்வம் கொண்டவர்கள் பெரும்பாலும் இணையத்தில் கூகுளில் அமர்ந்திருக்கும் ஐடி மனிதர்கள்தான். இந்த விபத்தில் மரணமடைந்த பெரும்பாலானோர் ஐடி துறையினர்தான். இன்று கூகுள் தேடலினால், பலர் டாக்டர் கூகுள், வக்கீல் கூகுள், டிரெயினர் கூகுளாக மாறியதன் விளைவுதான் இந்த டிரெக்கிங் மோகம். அமர்ந்த இடத்தில்  உடற்பயிற்சியற்ற வேலை, மன அழுத்தம் போன்றவை ஏதோ ஒரு மாற்றத்தை விரும்புகிறது. அதன் விளைவு மனம், கண்காணாத இடத்தில்  செய்யமுடியாத நடைபயிற்சியால் ஈர்க்கப்படுகிறது. இதற்கான கடை பரப்பியுள்ள  டிரெக்கிங் கிளப்புகள் இவர்களுக்கு எந்த பயிற்சியும் கொடுக்காமல் இரவில் புறப்பட்டு காலையில் முதுகுப் பையுடன் மலை நடைபயணம் தொடங்குகிறது.

வீடுகளில் தினசரி உடற்பயிற்சி, அலுவலகங்களில் வேர்வை சிந்தும் விளையாட்டுக்கான இடம் என இருந்துவிட்டால் ஊர் விட்டு ஊர் தெரியாத மலையேற்றம் தொடங்காமல் போயிருக்கும். 14 பேர் எரிந்து போய்விட்டதால் மலையேற்றமே தவறு என நீங்கள் வரிந்து கட்டி எழுதலாமா என கேட்பதும் புரிகிறது.

குரங்கணி மலைக் கிராமத்தில் உள்ளூர்க்க்காரர் வைத்த நெருப்பே இத்தீங்குக்கு காரணமாம். வெயில் காலங்களில் காய்ந்த சருகுகள் அதிகம் என்பதால் தீப்பற்றுதலும் பரவுதலும் அதிகமாம். இந்நாட்களில்  டிரெக்கிங் அனுமதி இல்லையாம். ஏப்ரல், மே மாதங்களில் முதுமலை சரணாலயம் கூட இதன் காரணமாக முழுமையாக மூடப்பட்டிருக்கும். சரி வனத்துறை என்று ஒன்று எதற்கு இருக்கிறது? வனச்சரகர்கள் என்ன செய்கிறார்கள்? தீத்தடுப்பு, பேரிடர் மேலாண்மை இல்லாமல் வனங்கள் இருக்கலாமா? இதை பயன்படுத்த தானே மக்கள். போகக் கூடாது என ஒருவரியில் எப்படி சொல்லலாம்? இவையும் நியாயமான கேள்விகள்தான்.

பேரிடர் கால மீட்பு பயிற்சிகள் எதுவுமில்லாத ஆர்.எஸ்.எஸ், பாஜக காரர்கள் செய்தி கேட்டு முதலில் போய் நின்று உதவியிருக்கிறார்கள்.  (பார்க்க பெட்டிச் செய்தி) இது அவர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கு ஓர் உதாரணம்.

தீயணைப்பு நிலையங்களில் ஊழியர்கள் வாகனங்கள் வேலையில்லாமல் இருப்பதால் துருபிடித்து போயிருக்கும். லாரியில் பலநேரம் தண்ணீர் கூட இருக்காது. ஊழியர்கள் பயிற்சி செய்யாததால் ஜடமென கிடப்பர். பேரிடரை சந்திக்கும் துறைகள் அவசரத்தை எதிர்பார்த்து தினசரி பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வப்போது ‘மாக் டிரில்’ எனப்படும் ஒத்திகைகள் நடத்தி மனிதனையும் இயந்திரத்தையும் அலர்ட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காடுகளிலுள்ள கிராம மக்களுக்கும் மலையடிவார மக்களுக்கும் பேரிடர் பயிற்சி தொடர்ந்து அளித்து அவர்களையும் அவசரத்தை சமாளிக்க தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் காட்டுத்தீ தடுப்புக் காவல் அமைப்புகளை தன்னார்வலர்கள் உதவியோடு ஏற்படுத்தி உள்ளனர். அதுபோல ’ஊணூடிஞுணஞீண் ணிஞூ

ஊணிணூஞுண்ணா’ என்பதுபோல தன்னார்வ தொண்டு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

என்னதான் கைடுகள் வந்தாலும் காட்டிலாகா  அனுமதி பெற்றாலும் நாமும் காடுகள் பற்றிய அறிவையும் ஞானத்தையும் மலை ஏற்றத்திற்கான உடற்பயிற்சிகளையும் பெற்றிருக்க வேண்டும். சமீபத்தில் கர்நாடகத்தில் வன அதிகாரி மணிகண்டன் யானை தாக்கி உயிரிழந்தார். மிகப் பெரிய அதிகாரிதான். அவரோடு பல மற்ற அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். யானை தாக்கி கீழே விழுந்த மற்ற அதிகாரிகள் எழுந்து ஓடிவிட்டனர். அவரோடு ஓடியவர்கள் வீழ்ந்தவரை தூக்கி விட்டிருந்தால் அவர் பிழைத்திருப்பார்.

உயிருக்கு ஆபத்து வரும்போது முதலில் தன்னை காத்துக் கொள்ளத்தான் நம் மெய்க்காப்பாளர்  கூட செய்வார். எனவே யாராவது நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற நினைப்பில் போகாமல், நம்மை நாமே காத்துக்கொள்ளும் உடல்பலம், மனோபலத்துடன் இம்மாதிரி டிரெக்கிங்களில் போகவேண்டும் என்பது நமக்கு படிப்பினை ஆகிறது.

மன அழுத்தம் குறைக்க உடல்நலத்தை உயர்த்த டிரெக்கிங் போகிறோமோ இல்லையோ இயற்கை அன்னையின் வனத்தை ரசிக்க, அனுபவிக்க மலை நடைபயணங்கள் அவசியம். அத்தகைய தருணங்களில் எதிர்பாராதவாறு ஏற்படுகின்ற இயற்கை பேரிடர்களையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கைப் பயிற்சியையும்  டிரெக்கிங் மேற்கொள்ளும்  நபர்கள் எடுத்துக்கொள்வது அவசியம். அதை மரண நடைபயணங்களாக மாற்றாமல் இருக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதைவிட அவசியம். இயற்கையோடு இணைந்த வாழ்வை பெற ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. அதை பெற்றுத்தர அரசை மட்டுமே  நம்பியிராமல்  நமது பங்கையும் ஆற்றுவோம்!

 

 

தமிழக அரசு மெத்தனம்?

காட்டுத் தீ (செயற்கைக் கோளின்) கண்ணில் பட்டதும் ‘பாரத வன சர்வே’ அமைப்பு உஷார்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு தனது வட்டார வன அலுவலர்களின் மொபைல் எண்களை எங்களுக்கு அனுப்பவில்லை. அனுப்பியிருந்தால் தொலையுணர்வு மையத்திலிருந்து உடனடி எச்சரிக்கை அனுப்பப்பட்டிருக்கும், மீட்பும் துரிதமாகியிருக்கும். (மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் தங்கள் எண்களை மையத்திற்கு அனுப்பியுள்ளன).

இஸ்ரோ சேர்மன் கே. சிவன்

 

 

 

அந்த கிளப்

குரங்கணி டிரெக்கிங்கில் தொடர்புடைய சென்னை டிரெக்கிங் கிளப் தமிழக அரசின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது வரவேற்கத்தக்கது. வெளிநாட்டவரை தலைவராகக் கொண்ட அதன் பின்புலம் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதுமாதிரி கிளப் கைடுகள் விசாரிக்கப்பட வேண்டும். சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்க பயிற்சி கொடுத்து அங்கீகரிக்கப்பட்ட கைடுகள், கிளப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

 

 

 

மீட்புப் பணியில் முதலாவதாக ஆர்.எஸ்.எஸ்

மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள் சிக்கிக்கொண்ட தகவல் கிடைத்தவுடன் குரங்கணி ஆர்.எஸ்.எஸ்  நிர்வாகிகள் மணிகண்டன், ஐயப்பன் ஆகியோர் அங்கு விரைந்தனர். தப்பி வந்த ஏழுபேர் வனப்பகுதியில் பாதை தெரியாமல் தவித்ததால் அவர்களை மீட்டு குரங்கணிக்கு அழைத்து வந்தனர். தீ வளையத்திற்குள் 20க்கும் மேற்பட்டோர் சிக்கிய தகவல் கேட்டு உதவி செய்யுமாறு எங்களை தொடர்பு கொண்டனர். பாஜக மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் பாஸ்கரன், மாவட்ட அமைப்பு செயலர் கனகராஜ், போடி நகர் தலைவர் தண்டபாணி ஆகியோருடன் நான் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உணவு, குடிநீருடன் குரங்கணி விரைந்தோம். அங்கிருந்த நிர்வாகிகளை அழைத்து, மீட்புப் படையினருக்கு வழிகாட்டுவது, காயமடைந்த 2 பேரை மீட்டது போன்ற பணிகளில் ஈடுபட்டோம்.

– சுந்தரேசன் (ஆர்.எஸ்.எஸ்.,தேனி)