நல்லதே நினைப்போம்… நல்லதே நடக்கட்டும்!

சமீபத்தில் உ.பி., பீஹார் மாநிலங்களில் நடைபெற்ற மூன்று நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் அபார வெற்றி பெற்ற பாஜகவிற்கு இது ஒரு அதிர்ச்சிகரமான தோல்விதான். இந்தத் தோல்வி கூட நன்மைக்கே என்று தோன்றுகிறது. பாஜகவிற்கு தன்னை ஆத்ம சோதனை செய்து கொள்வதற்கு இது நல்லதொரு வாய்ப்பு.

தனித்துப் போட்டியிட்ட காங்கிரசுக்கு உபியில் டெபாசிட்டே கிடைக்கவில்லை. காங்கிரஸ் அதை மறந்துவிட்டு பாஜக தோல்வி குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதுதான் கேலிக் கூத்து.

தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ‘பாஜக இனி அவ்வளவுதான்’ என்று விவாதங்கள் நடத்தி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொண்டன.

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. மிகவும் எளிமையான, நேர்மையான முதலமைச்சர். அதனால் இந்த தேர்தல் முடிவை மாநில அரசு பற்றிய மக்களின் கணிப்பு என்று கூற இயலாது.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்து அதற்குத்தக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசின் மக்கள் நல திட்டங்களை கடைக்கோடி மக்களுக்குக் கொண்டு செல்வது கட்சியினரின் கடமை.

மேல்தட்டு மக்களுக்கு என்று இல்லாமல் சாதாரண தொழில் முனைவோருக்கும் வங்கிகள் உதவி செய்வது எளிமையாகப்பட வேண்டும். ஊழல் பெருச்சாளிகள் தங்கள் பண பலத்தால் விடுதலையாகி வருகிறார்கள். அரசு முனைப்போடு வழக்கு நடத்தி அவர்களைத் தண்டிக்க வேண்டும்.

எனினும் பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிசான் சங்கம், ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச் போன்ற இயக்கப் பொறுப்பாளர்களுடன் அரசு கலந்து பேசி அவர்களின் நல்ல ஆலோசனைகளை பரிசீலிப்பது முக்கியம்.

ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்த தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லது.

நல்லதே நினைப்போம்… நல்லதே நடக்கட்டும்.