காஷ்மீர் கனமழையில் சிக்கிய கேரள பயணியர் 200 பேர் மீட்பு

ஜம்மு – காஷ்மீரில் கனமழை காரணமாக ஜம்மு — ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு, பாறைகள் சரிவு ஏற்பட்டு, நேற்று இரண்டாவது நாளாக போக்குவரத்து முடங்கியது. இங்கு சிக்கி தவித்த கேரளாவைச் சேர்ந்த 200 சுற்றுலா பயணியரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக பனிபொழிவுடன் கனமழையும் கொட்டியது. இதனால் பல்வேறு வீடுகள், பள்ளிகள் சேதமடைந்துஉள்ளன. தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுஉள்ளது. இதற்கிடையே, கனமழையால் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது.

ரம்பன் மாவட்டம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்துள்ளன. இந்நிலையில் கேரளாவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற, 200 சுற்றுலா பயணியர் நேற்று முன்தினம் இரவு இங்குள்ள பனிஹால் பகுதியில் சிக்கினர்.

அவர்கள் அனைவரையும் போலீசார் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்; அவர்களுக்கு தேவையான உணவு, போர்வைகளையும் வழங்கினர்.
நேற்று காலை வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், போக்குவரத்தை மீண்டும் துவக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.