கவி காளிதாசன் வர்ணித்த காஷ்மீரம்

ரு வார கால இன்பச் சுற்றுலாவாக வெள்ளிப் பனிமலை படர்ந்த இமயத்தின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் நோக்கிப் புறப்பட்டோம். உலகம் போற்றும் இயற்கை வனப்பு கொண்ட காஷ்மீரம் இந்தியாவின் கிரீடம், பூலோக சுவர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாஸனால், காஷ்மீரத்தின் சிறப்புகள் அவனது காவியங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளன. முகலாயப் பேரரசன் ஜஹாங்கீர் காஷ்மீரின் அழகில் மயங்கி பூமியில் சொர்க்கம் உண்டென்றால் அது இதுதான் என்று புகழ்ந்துள்ளான்.

வெண்பனியிலான முகடுகள், பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள், சிலிர்க்க வைத்து ரசிக்க வைக்கும் குளிர், இமயத்தில் இருந்து ஓடிவரும் ஆறுகள், அடர்ந்த பைன் மரக்காடுகள், தேவதாரு மரங்கள், அழகிய ஏரிகள், காட்டு மலர்கள், கண்களைக் கவர்ந்து ருசித்திடும் ஆப்பிள், செர்ரி, பாதாம், அக்ரூட், பேரிச்சை போன்றவை காஷ்மீரின் அடையாளங்கள். காஷ்மீரின் கைவினைப் பொருட்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், மற்றும் ஜம்மு ஆகிய மூன்று பகுதிகள் உள்ளடக்கிய ஜம்மு- காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

பிரம்மாண்ட மலைகள், தெளிந்து ஓடும் நீரோடைகள் பிரசித்தி பெற்ற கோயில்கள் காஷ்மீரின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவன. பஹல்காம், சோனா மார்க், குல்மார்க், பானிடால், த்ராஸ், கார்கில், வைஷ்ணோ தேவி ஆலயம், அருங்காட்சியகங்களான, அமர்மஹால், டோக்ரா, ஆகியவை காண வேண்டிய முக்கிய இடங்கள். தால் ஏkashmirரியும் நாகின் ஏரியும் புகழ்பெற்று விளங்கும் ஏரிகள்.

காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகர் ஸ்ரீநகர், குளிர்காலத் தலைநகர் ஜம்மு.

‘கிழக்கின் வெனிஸ்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீநகரை நோக்கிப் புறப்பட்டோம். பெங்களூருவிலிருந்து டெல்லி, அங்கிருந்து ஸ்ரீநகர் விமானப் பயணம். ஜன்னலோர இருக்கையிலிருந்து வெண்பனிக் கூட்டங்களிடையே விமானம் பறப்பதும், பனிமலைகளின் ரம்மியமான தோற்றமும், கீழே கோடாக ஓடும் கங்கையும் பார்க்கப் பரவசமூட்டின.

ஸ்ரீநகர் விமான நிலையம் எந்த பந்தாவையும் காட்டிக் கொள்ளாமல் எளிமையாகக் காணப்பட்டது. தயாராக இருந்த உள்ளூர் பஸ்ஸில் ஏறினோம். பழைய கட்டிடங்கள். தகரத்தினால் ஆன மேல்கூரைகள் இருபுறமும் சரிந்து காணப்பட்டன. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். எல்லா இடங்களிலும் ஆங்கில போர்டுகளே தென்பட்டன. உருது மொழி பேசப்படுகிறது. போலீஸ் தலைகள் நிறைய காணப்பட்டன. ஆனால் நாங்கள் சென்ற சமயம் அமைதியான சூழ்நிலையே நிலவிற்று. மக்கள் நட்பாகவே பழகுகிறார்கள். பின் ஏன் இந்தக் குழப்பம், கூச்சல், மதவெறி? இறைவன் எல்லோரையும் ஒற்றுமையுடன் வாழ அருள வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் மனதில் எழுந்தது.

நாங்கள் தங்கப் போகும், படகுவீட்டை அடைய ஏரிக்கரையிலிருந்து சிறிய படகில் எங்களை அழைத்துச் சென்றார்கள். வரவேற்பு பானம் அளிக்கப்பட்டது. விற்பனைப் பொருட்கள் வியாபாரிகள், சிறு படகுகளில் வந்து ஒவ்வொருவராக எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

படகுவீடு எல்லாவசதிகளையும் கொண்டுள்ளது. முஸ்லிம் அரசர்களின் அரண்மனை போல் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவதாரு மரங்களாலானவை படகுவீடுகள் என்று சொன்னார்கள். இந்த மரம் தண்ணீரில் இன்னும் பலம் பொருந்தியதாக இருக்கும் என்று விளக்கினார்கள். சிறிது இளப்பாறிய பின்னர், ஷிகாரா எனப்படும் சிறு படகுகளில் ஏறி ஏரியைச் சுற்றினோம். சிறு படகுகளில் வியாபாரிகள்,  குங்குமப்பூ, கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்களைச் வந்து வியாபாரத்தைத் துவக்கினார்கள். ஒரு காலை, எங்கள் படகில் வைத்துக் கொண்டு படகு நகராமல் வியாபாரம் நடந்தது. போலிப் பொருட்களை வாங்கியும், அதிகவிலை கொடுத்து வாங்கும் சூழ்நிலையும் உள்ளது. மிகவும் விழிப்பாக இருக்கவேண்டியுள்ளது. ஆனாலும் படகில் உட்கார்ந்தபடி மூக்குசிவந்த அன்னங்கள், புது விதப் பறவைகள், குருவிகள், பலநிற மலர்கள், தாவரங்கள், ஏரியைச் சூழ்ந்துள்ள மலைகளையும் ரசித்தபடி, படகைவிட்டு இறங்காமல் செய்த வியாபாரம் மிகப் புது அனுபவத்துடன் ரசிக்கும்படியாக இருந்தது.

விவாஸ்தா என்று புராணங்களில் கூறப்பட்ட இன்றைய ஜீலம் நதிக்கரையிலே அமைந்துள்ளது ஸ்ரீநகர். கஸ்யப மகரிஷி தவமியற்றிய புண்ணிய பூமி. பனிமூடிய மலைச்சிகரங்கள் அரன் செய்ய ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது, சங்கராச்சாரியார் குன்று. சீரான 287 படிகள். மேலே உச்சியில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம். சுற்றிலும், 2 பிள்ளையார்கள், பார்வதி, சிவன், சுப்பிரமணியர் ஆகியவர்களின் சிறு சிலைகள். லிங்கத்தின் மீது சொட்டுச் சொட்டாக தாராபாத்திரத்திலிருந்து விழும் நீர்த்திவலைகள். ஒரு பெரியவர் அனைவருக்கும் சந்தனத்திலகம் இட்டு, பிரசாதத்தீர்த்தம் கொடுத்தார்.

ஸ்ரீநகரிலிருந்து, 100 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற சாரதா ஆலயம் உள்ளது. மரகதப்பச்சை போர்த்த வயல்கள், பழங்கள் செழித்துத் தொங்கும் மரங்கள், நீலநிறம் காட்டும் ஏரிகள், உயர்ந்த மரங்கள் நிறைந்த இயற்கை கொலுவீற்றிருக்கும் அழகிய பீடபூமி. வனங்களால் சூழப்பட்ட இந்த அழகிய சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் பிறமதங்களை வாதிட்டு வென்று, சர்வக்ஞபீடம் ஏறிய ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பட்டுள்ள கல்லால் ஆன சர்வக்ஞ பீடத்தை இன்றும் காணலாம்.

ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ‘சஷ்மே ஷாஹி’ (Chashme Shahi) என்னும் அழகிய முகலாய தோட்டம். முஸ்லிம் மன்னன் ஷாஜஹானால் அவனது பெரிய மகள் தாரா ஷிகோ (Dara Shikoh)விற்கு பரிசாக அளிக்கப்பட்டது. ஷாஜகானின் கட்டளைப்படி, அவனது கவர்னர் அலி மார்டன்கான் (Ali mardar khan) 1632 ADஇல் ஒரு ஏக்கர் நிலத்தில் நிர்மாணித்தான். அங்கு அமைந்துள்ள நீரூற்று மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

யுஸ்மார்க் (Yusmarg) என்றும் அருமையான மலை வாசஸ்தலம் ஸ்ரீநகரிலிருந்து 49 கிலோ மீட்டர் தூரத்தில், இமயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது ஜீலம் நதியின் கிளை நதியாக தூத்கங்கா (doodh Ganga) வின் கரையில் உள்ளது. சிலகாலம் ஏசு இங்கு தங்கி இருந்ததாக நம்பப்படுகிறது. 15,16 வது முதல், தள்ளாடும் தாத்தாக்கள் வரை உடலுக்குப் பொருந்தாத தொள தொள அழுக்கு அங்கி, பைஜாமா, தொப்பி அணிந்து, குதிரையுடன் சவாரி பிடிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்.

மலர் மைதானம் என்ற பொருள் கொண்டது குல்மார்க்கமலை – வாழிடம். பாராமுல்லா ஜில்லாவில் கடல் மட்டத்திலிருந்து 2,690 அடி உயரத்தில் உள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. சிவனின் மனைவி கௌரியைக் குறிப்பதாக அமைந்த ‘கௌரிமார்க்’ என்னும் பெயர் காலப்போக்கில் ‘குல்மார்க்’ என்று மாறி உள்ளது. இங்கு கோண்டாலா எனப்படும் புகழ்பெற்ற கேபிள் கார் பனிமலைக்கு அழைத்துச் செல்லுகிறது. எங்கும் பனிமலை, பயங்கரமான குளிர். ஆனாலும் அருமையான அனுபவம்.

அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகள் தங்கும் அடிவாரம் சோனாமார்க். தங்கப் புல்தரை என்பது இதன் பொருள். பனியால் போர்த்தப்பட்ட கார்ப் பெட் போல் காட்சி அளிக்கிறது. இங்கு முக்கியமாக தம்மைக் கவருவது தாஜிலாஸ் க்ளேஸியர் (Thajlas Glasier).

ஜம்முவிலிருந்து 62 கிலோமீட்டர் தூரத்தில் அழகிய மான்ஸர் ஏரி உள்ளது. சுற்றிலும் காடுகள், மலைகள். புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இது மானஸரோவர் ஏரி போன்று புனிதமாகக் கருதப்படுகிறது.

ஜம்முவின் மையப்பகுதியில் கடைத்தெருவில் அமைந்துள்ள ரகநாத் மந்திர் மிகப் பெரிய ஆலயம். காஷ்மீர் ராஜ்ஜியத்தை நிறுவிய மகாராஜா குலாப்சிங் கி.பி.1835ல் கட்டத் துவங்கி, அவரது மகன் ரண்பீர்சிங்கால் 1860ல் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலின் மூன்று பக்கச்சுவர்கள் தங்கத் தகடுகளால் ஆனவை. இந்தக் கோயிலின் முக்கிய கடவுள் ராமர், மோக்ரா மக்களால் மிகவும் பக்தியுடன் வணங்கப்படுபவர்.kashmir1

ஜம்முவிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் தாவி நதியில் இடது கரை ஓரமாக அமைந்துள்ளது பஹூ கோட்டை. ராஜா பஹூ லேச்சன் கட்டிய இந்தக் கோட்டையை டோக்ரா அரசர்கள் மேலும் அழகூட்டினார்கள். கோட்டையின் உள்ளே உள்ள ‘பாவேவாலிமாதா’ எனப்படும் காளிமாதா வைஷ்ணோ தேவிக்கு அடுத்த சக்தி வாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். ஜம்முவிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது காட்ரா. இங்கு 1,700 மீட்டர் உயரமுள்ள திரிகூட மலையின் உச்சியில் வைஷ்ணோ தேவி ஆலயம் உள்ளது. இது குகைக் கோயில். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

குகை 30 மீட்டர் நீளமும், 1லீ கிலோ மீட்டர் உயரமும் கொண்டது. அடிவாரம் கட்ராவிலிருந்தே மக்கள் கூட்டம் நெருக்குகிறது. இலவசமாக அளிக்கப்படும் அனுமதிச்சீட்டைப் பெற்ற பின்னரே நாம் செல்ல முடியும். அடிவாரத்திலிருந்து 13 கிலோமீட்டர் மலைப்பாதை. நடந்தோ, டோலியிலோ, மட்டக் குதிரையிலோ செல்லலாம். நேரே கோயிலுக்கருகில் அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் 15 பேர்களே போக முடியும் என்பதால், வெகு முன்பே இணையத்தின் மூலம் முன்பதிவு செய்திருத்தாலொழிய, அதில் பயணச்சீட்டு கிடைக்காது.

நுழைவாயிலில் நுழைந்து, சிலீரென்று இருக்கும் நீரில் நடந்து ஆலயத்தை அடைகிறோம். மகாகாளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகிய மூன்று வடிவங்கள் வரிசையாக உள்ளன. சிலை வடிவம் கிடையாது. பிண்டிகள் எனப்படும் சுயம்பு ரூபங்களாகத் தேவியர் காணப்படுகின்றனர். பிண்டிகளை கவனமாகப் பாருங்கள் என்ற அறிவிப்பு அங்கு காணப்படுகிறது. 24 மணி நேரமும் தேவியை தரிசிக்கலாம். கிடைக்கும் இரண்டு இடுக்குகளின் வழியாகப் பார்க்கும் போதே, வெளியேற்றப் படுகிறோம். ஆனாலும், வைஷ்ணவியைத் தரிசித்த நிறைவுடன் யாத்திரையை முடித்து ஊர் திரும்புகிறோம்