ஆர்.எஸ்.எஸ்ஸும் சுவாமி சித்பவானந்தரும்

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் எந்த ஒரு இயக்கத்தையும் மிகச் சுலபமாக ஏற்றுக் கொள்ளமாட்டார். ஓர் இயக்கத்தை நன்கு ஆராய்ச்சி செய்து அதைப்பற்றிய உண்மையை அறிந்த பிறகுதான் ஏற்றுக்கொள்ளலாமா  வேண்டாமா என்று முடிவு செய்வார். உண்மையிலேயே ஒரு இயக்கம் நல்லதாக இருக்குமாயின் அதை ஆதரித்து அவ்வியக்கம் வளர்வதற்கு எல்லா உதவிகளும் செய்வார். தெய்வத்திற்கு நலம் செய்யக்கூடிய எந்த இயக்கத்தினர் தம்மிடம் வந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று அவர்கள் தங்கள் நற்பணியினை ஊக்கமாகக் செய்வதற்கு உற்சாகம் அளித்து ஆசி வழங்குவார்.

இன்றைக்குச் சுவாமி விவேகானந்தரின் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருகின்ற சிறந்த இயக்கமாக ஆர்.எஸ்.எஸ்  இருந்து வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்முறைகளை ஸ்ரீமத் சித்பவானந்தர் நீண்ட நாட்கள் கவனித்துப் பார்த்தார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களோடு உரையாடி அவர்களுடைய செயல் திட்டத்தையும் நன்கு அறிந்தார். சங்கம் நடத்தும் பயிற்சி முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கி இருந்து நிகழும் நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துப் பார்ப்பார்.

அதன் பிறகுதான் இது ஒரு செயல்முறை இயக்கம் என்றும் கட்டுப்பாடும் கடமை உணர்வும் ஒழுக்க முறையும் உடைய இயக்கம் என்றும் அறிந்தார். இன்றைய நாட்டுக்கு இத்தகைய இயக்கம்தான் தேவை என்று முடிவு கட்டி சங்கத்திற்கு ஆதரவும் ஆசியும் அவ்வப்பொழுது அளித்து வந்தார். சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சுவாமியை சந்திக்க வரும்போதெல்லாம் அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்து வந்தார்.

தபோவனத்திலும் திருவேடகத்திலும் சங்கம் நடத்தும் முகாம்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளித்தும் தபோவனத்தை தாங்கள் தாய்வீடாகக் கருதிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சங்கப் பொறுப்பாளர்களிடம் கூறியுள்ளார். சங்கத்தைப் பற்றி சுவாமிஜி தம் கருத்துக்களை சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியபொழுதும் சங்க கார்யகர்த்தர்களிடையே உரையாடிய பொழுதும் வெளியிட்டுள்ளார். 1980ம் ஆண்டு மே மாதம் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற சங்க சிக்ஷா வர்க நிறைவு விழாவில், இளைஞர்களே, நீங்கள் பாக்கியவான்கள் சங்க பயிற்சிமுகாமில் பங்குபெறும் பேறு பெற்றிருக்கிறீர்கள். சுவாமி விவேsithbavanathaகானந்தர் மனிதர்களை உருவாக்கும் கல்வி நாட்டுக்கு தேவை என்றார். அது சங்கத்திலே நிறைவேற்றப்படுகிறது” என்று கூறினார்.

சங்கத்தின் மூத்த பிரச்சாரக் கி.சூரியநாராயண ராவ் அவர்களிடம் ஒரு சமயம் சுவாமிஜி கூறியதாவது, தீய சக்திகளை தடுத்து நிறுத்த நல்லவர்களுக்குத் தைரியம் இல்லாமற் போனதால் தான் அழிவுச் செயல்கள் நிகழ்கின்றன. அனைவரும் சங்கத்தில் பயிற்சி பெற வேண்டும். அப்பொழுது தான் தீமையை எதிர்த்து நிற்கும் துணிவு பெறுவார்கள். தீமையை ஒழிப்பதற்கு சங்கப் பயிற்சிதான் ஒரே தீர்வு. ஒவ்வொரு ஆண்டும் தபோவன கிளை நிறுவனம் ஒன்றில் சங்க பயிற்சி முகாம் நடைபெற வேண்டும். அங்ஙனம் ஒவ்வோர் ஆண்டும் நடத்த முடியாவிட்டால் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்” என்று கூறினார். இன்றும் சுவாமிஜி கூறியபடியே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கக் கூடிய தபோவனத்தின் கிளை நிறுவனங்களில் சங்கப் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றது.

1985ம் ஆண்டு திருவேடகத்தில் சங்கமுகாம் நடைபெற்றது அச்சமயம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சுவாமிஜி ‘என் இறுதி மூச்சு வரை சங்கத்திற்காக – சங்கத்தின் முன்னேற்றப் பணிகளில் என்னை இணைத்துக் கொள்வேன்’ என்று பேசியுள்ளார். திருச்சியில் நடந்த சங்க சாலக்கர்கள் கூட்டத்தில் பேசும் பொழுது சுவாமிஜி, ‘நீங்கள் அனைவரும் அவரவர் ஊரில் மதிப்புமிக்கவர்கள். சங்கப் பணிக்காக அதிகநேரம் செலவிட்டு உழைக்கவேண்டும். உலக அரங்கில் நம் நாடு மீண்டும் புகழோங்கியதாக விளங்கவேண்டும் என்பது இறைவனது திருவுள்ளம்.

எனவே, அதற்காக இறைவன் தம் பேரருளால் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை உருவாக்கினார். இது என்னனுடைய நம்பிக்கை என்று கூறினார். சுவாமிஜியின் இந்த பேச்சு சங்க கார்யகர்த்தர்களுக்கும் பிரச்சாரகர்களுக்கும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும் விதமாக அமைந்தது. இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் காவி உடை அணிந்த ஒரு மூத்த ஸ்வயம்சேவக்காகவே இருந்து வந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. சுவாமிஜியின் வழித்தோன்றலாக வந்த அனைத்து சாது மகாத்மாக்களும் சங்கத்திற்கும்  சங்க நிகழ்ச்சிகளுக்கும் பெரிய சுவாமியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் உதவி புரிந்தும், ஆசி புரிந்தும் வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி விவேகானந்தர் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு வேண்டிய வித்தினை விதைத்துள்ளதாக கூறியுள்ளார். காலப் போக்கில்தான் நாம் அதன் மகிமையை உணரமுடியும். அங்ஙனம் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் நேரடியாகவும் மானசீகமாகவும் ஆசீர்வதித்த இயக்கங்கள் நாட்டுக்குச் செய்யும் நலனைக் காலப்போக்கில்தான் அறிந்து கொள்ள முடியும். நாட்டுக்கு நலம் செய்யும் இயக்கங்களுக்கு, ஆசியும் தெய்வத்திடமிருந்தும் சான்றோர்களிடமிருந்தும் வந்துகொண்டே இருக்கும்.

ஆனந்தமாக இருங்கள்

வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் அருட்புதல்வராக பணியாற்றிய ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இறுதியாக திருவாய் மலர்ந்து அருளியது ‘ஆனந்தமாக இருங்கள்’ என்ற மஹா வாக்கியத்தையே. அண்ணலின் அடியொற்றி ஆனந்தமாக இருப்போம்! அனைவரையும் ஆனந்தமாக இருக்க வைப்போம்.