கர்மயோகி குருஜி

குருஜியின் இளமைக் காலம்

குருஜியின் இயற்பெயர் மாதவன்#vijaya. 1906, பிப்ரவரி 19ம் தேதி நாகபுரியில் பிறந்தார். சதாசிவம் என்பது அவரது தந்தையார் பெயர். தாயார் தாயி என்று அழைக்கப்பட்டார். இவர்களுக்குப் பிறந்த 9 குழந்தைகளில் மாதவன் தவிர அனைவரும் சிறுவயதிலேயே பல காரணங்களால் காலமாகி விட்டார்கள். மாதவன் தனது கல்லூரி படிப்பிற்குப் பிறகு காசியில் உள்ள ஹிந்து பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இவர் பாடம் நடத்திய முறை, மாணவர்களிடம் இவர் காட்டிய அன்பின் காரணமாக அனைவரும் இவரை ‘குருஜி’ என்றே அழைத்தார்கள். விலங்கியல் பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியாக சென்னை மெரீனா கடற்கரை மீன் அருங்காட்சியகத்தில் பயிற்சி பெற்றார் ஸ்ரீகுருஜி. பின் சட்டம் படித்து வழக்கறிஞரானார். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரிடைச் சீடரான சுவாமி அகண்டானந்தரிடம் சென்று அவரின் சீடரானார். அவர் தனது கடைசி காலத்தில் குருஜிக்கு தீட்சை அளித்து, “நீ இமயமலை சென்று பெரிய தவ வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு பதில், மக்கள் மத்தியில் இருந்துகொண்டு சமுதாயத்திற்கு தொண்டு செய்” என்று அறிவுரை வழங்கினார். “இந்த தாடியும், சடைமுடியும் உனக்கு அழகாக இருக்கிறது. அவற்றை ஒரு போதும் எடுத்து விடாதே” என்றும் அறிவுறுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவரானார்

காசி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும்போது ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டாக்டர்ஜி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர். எஸ். எஸ். இயக்கத்தில் குருஜி இணைந்தார். காசி ஹிந்து பல்கலைக் கழக ஸ்தாபகர் பண்டித் மதன் மோகன் மாளவியா சங்கத்தின் பணியைப் பாராட்டி, கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சங்கத்திற்கென ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார். அது கார்யாலயமாக செயல்படத் துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகா பணியில் குருஜி தீவிரமாக ஈடுபடத் துவங்கினார். அவரை டாக்டர்ஜி சங்கத்தின் சர் கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) என அறிவித்தார். தனக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைமைப் பொறுப்பை நீங்கள்தான் ஏற்கவேண்டும் என குருஜியிடம் டாக்டர்ஜி வேண்டுகோள் விடுத்தார். 1940, ஜூன் 21ம் தேதி டாக்டர் ஹெட்கேவார் காலமானார். டாக்டர்ஜியின் விருப்பத்திற்கேற்ப 1940 ஜூலை 3ம் தேதி ஸ்ரீ குருஜி சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் (தலைவர்) ஆக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 34 வயது. அன்று தொடங்கி 33 ஆண்டுக்காலம் பாரத தேசத்தை 72 முறை வலம் வந்து சங்கப்பணி வளர்த்தார். ரயிலே அவரது ‘இரண்டாவது வீடு ‘ ஆயிற்று.

தடையைத் தகர்த்த ஸ்ரீ குருஜி

1948, ஜனவரி 30ம் தேதி சென்னையில் நகர பிரமுகர்களுக்கென ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஸ்ரீகுருஜி கலந்து கொண்டு பேசினார். அன்று டில்லியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற மகாத்மா காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வானொலியில் அறிவிக்கப் பட்டது. உடனடியாக குருஜி, நேரு, படேல், காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு இரங்கல் தந்தி அனுப்பினார். அத்துடன் துக்கத்தை அனுஷ்டிக்கும் வகையில் 13 தினங்கள் சங்க ஷாகாக்கள் நடத்த வேண்டாம் என்ற குறிப்பு அனுப்பப்பட்டது. சங்கத்தின் மீது பொறாமை கொண்டி ருந்த காங்கிரஸ் தலைவர்கள், இதுதான் தக்க நேரம் எனக் கருதி காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். மீது சுமத்தி, ஆர்.எஸ்.எஸ்ஸை தடை செய்தனர். ஸ்ரீகுருஜி கைதானார். தடையை நீக்க மாபெரும் சத்தியாகிரஹப் போராட்டம் நடைபெற்றது. இரண்டே மாதங்களில் 60,000 ஸ்வயம் சேவகர்கள் கைதா னார்கள். கடைசியில் அரசு எவ்வித நிபந்த னையுமின்றி 1949 ஜூலை 12ம் தேதி தடையை நீக்கியது. அரசைப் பற்றிச் சொல்லும்போது “நாம் சாப்பிடும்போது சில சமயம் பற்களுக்கு இடையில் அகப்பட்டு நாக்கு கடிபட்டு விடும். மிகவும் வலிக்கும். ஆனால் அதற்காக யாராவது பற்களைக் கோபித்துக் கொள்கிறார்களா? அதுபோலத்தான் இதையும் பார்க்க வேண்டும்” என்றார் ஸ்ரீ குருஜி.

உணர்ச்சிமிகு கடிதங்கள்

சுவாமி அகண்டானந்தர் குருஜிக்கு ஒரு கமண்டலம் கொடுத்திருந்தார். எப்போதும் அதை அவர் தமக்கு இடது புறம் வைத்திருப்பார். பயணத்திற்கு புறப்படும் போது மட்டும் அதை வலது புறம் வைத்துக் கொள்வார். 1973, ஜூன் 5ம் தேதி காலையிலேயே கமண்டலத்தை வலது புறம் எடுத்து வைத்துக் கொண்டார். நீண்ட நெடும்பயணம் செய்ய அவர் ஆயத்தமாகிவிட்டார். அன்று மாலையில் சங்கஸ்தானில் பிரார்த்தனை பாடினார். இரவு 9 மணி 5 நிமிடத்திற்கு குருஜி இவ்வுலக யாத்திரையை முடித்துக் கொண்டார். குருஜி காலமாவதற்கு முன்பு கடிதங்களை எழுதிக் கொடுத்திருந்தார். அந்தக் கடிதங்கள் அவர் காலமான பிறகு பிரித்துப் படிக்கப்பட்டன. முதல் கடிதத்தில், ‘தனக்குப் பிறகு பாளாசாஹேப் தேவரஸ் சர்சங்கசாலக் (அகில பாரதத் தலைவர்) பொறுப்பேற்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இரண்டாவது கடிதத்தில், ‘தனக்கு எந்தவிதமான நினைவுச் சின்னம் நிறுவக் கூடாது’ என்று கூறியிருந்தார். மூன்றாவது கடிதம் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. அதில் அந்த மகான் அனைவரிடமும் மன்னிப்புக் கோரியிருந்தார்!

ஸ்ரீகுருஜி பிறந்த தினம்