கர்ப்ப கால யோகா பயிற்சியால் சுகப்பிரசவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் கர்ப்பகால யோகா பயிற்சியால், சுகப்பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை திருவல்லிக்கேணியில், கஸ்துாரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென்பொருள் என்ற, ‘பிக்மி 3.0’ இணையதளத்தை, அமைச்சர்கள் உதயநிதி, சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில், மகப்பேறு செவிலியர்கள் வழிநடத்தும் பராமரிப்பு மற்றும் பயிற்சி பிரிவு திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில், யோகா பயிற்றுவித்து வருவதால், சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சுகப்பிரசவங்களை மேலும் அதிகரிக்க, பராமரிப்பு மற்றும் பயிற்சி பிரிவு துவக்கப்பட்டுஉள்ளது.

பிரசவ காலத்தில் ஏற்படுகிற ரத்த போக்கிற்கு சிகிச்சை அளிக்க, 2.98 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை, பிரசவ கால சிகிச்சைக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும். கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகளை கண்காணிக்கும் வகையில், ‘பிக்மி 3.0’ என்ற இணைய தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் வாயிலாக, மகப்பேறு வசதிகள் மற்றும் தொடர் பராமரிப்பு சேவைகளை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.